Book of மீகா in Tamil Bible
மீகா - "பெத்லகேமில் மேசியா பிறப்பு; நீதியும் இரக்கமும்"
1. அமைப்பு:
ஏசாயாவின் புத்தகத்திலுள்ள செய்திக்கு ஒத்தசெய்தி மீகாவிலும் இருக்கிறது. மீகா புத்தகத்தின் அதிபட்சம் தென்ராஜ்யமாகிய யூதா வுக்குக் கொடுக்கப்பட்டதாகும். ஒரு சிறியபகுதி மாத்திரம் இஸ்ரவேலாகிய வடராஜ்யத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. யோதாம் (கி.மு.739 முதல் 731), ஆகாஸ் (கி.மு.731 முதல் 715) மற்றும் எசேக்கியா (கி.மு.715 முதல் 686) ராஜாக்களின் நாட்களில் இந்தப் புத்தகம் வருகிறது. இஸ்ரவேல் அசீரியாவினால் தாக்கப்பட்டு வீழ்ச்சிக்குள் சென்றுகொண்டிருந்த நேரம், அசீரியர்கள் யூதா வையும் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் பாபிலோன் ஆசீரியர்களுக்குக்கீழ் இருந்துகொண்டிருந்தது. இப்படிப்பட்ட தருணத்தில் வருங்காலத்தில் யூதா பாபிலோனுக்குள் சிறையாகக் கொண்டுசெல்லப்படும் என்று முன்னறிவிப்பது உண்மையிலே மிகவும் போராட்டமான ஒன்றாக இருந்தது.
மீகா 4: 10 சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரியைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு, நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய், அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீக்கலாக்கி மீட்பார்.
2. மீகா:
மீகா என்ற பெயருக்கு கர்த்தரைப் போன்றவர் யார் என்று அர்த்தமாகும். மீகாவும் ஆமோஸ், ஏசாயா, யோனா மற்றும் ஓசியா தீர்க்கதரிசிகளின் காலத்தோடு சம்பந்தப்பட்டவராவார். எருசலேமிற்குத் தென்கிழக்கே, 25 மைல் தொலைவில் பெலிஸ்திய எல்லையிலிருந்த மொரேசா என்ற கிராமத்திலிருந்து மீகா வந்தார்.
மீகா 1: 1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தாிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.
மீகா 1: 14 ஆகையால் மோர்ஷேத்காத் -தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய், அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.
இவரைக்குறித்த அதிகமான குறிப்புகள் நமக்குக் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், ஒருமுறை எரேமியாவைக் காப்பாற்றுவதற்கு இவர் கருவியாகப் பயன்படுத்தப்பட்டார். எரேமியாவிற்கு சுமார் 150 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர் நாகூம் ஆனால் அவருடைய வார்த்தைகள் எரேமியாவின் நாட்களில் நினைவுகூரப்பட்டன.
எரேமியா 26: 16-19 அப்பொழுது பிரபுக்களும் சகலஜனங்களும், ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள். 17. தேசத்திலே மூப்பரானவர்களில் சிலர் எழும்பி, சபையாகிய ஜனங்களை நோக்கி: 18. யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான். 19. அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார், இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரப்பண்ணுகிறவர் களாயிருக்கிறோமே.
3. செய்தி:
இந்தப் புத்தகத்தில் 3 தீர்க்கதரிசனங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. முதலாவது தீர்க்கதரிசனம் கி.மு.722ற்கு முந்தையதைக் குறித்ததாகும். இது சமாரியாவைக்குறித்தும் அதற்கு வரவிருந்த அழிவைக்குறித்தும் சொல்கிறது. இரண்டாவது தீர்க்கதரிசனம் எரேமியா 26: 18-19 நமக்குச் சொல்வதுபோல, எசேக்கியா ராஜாவின் நாட்களோடு தொடர்புடையதாகும். மூன்றாவது தீர்க்கதரிசனமும், கி.மு.722ற்கு முந்தையதைக் குறித்ததாகும். இது வரவிருந்த இஸ்ரவேலின் அழிவோடு (குறிப்பாக உம்ரி மற்றும் ஆகாபுடைய வீட்டின் அழிவோடு) தொடர்புடையதாக இருந்தது. முதல் 5 புத்தகங்களாகிய பஞ்சாகமத்தில் மொத்தம் 613 கற்பனைகள் உள்ளன. சங்கீதம் 15ல் அது 11 சுருக்கப்பட்டன. மீகாவில் அவைகள் மேலும் 3ஆகக் குறைக்கப்பட்டன. மத்தேயு 22: 35-40ல் அது ஒன்றாக்கப்பட்டது. தேவன் நம்முடைய இருதயத்தை விரும்புகிறார், அவர் நம்மோடு உறவை விரும்புகிறார்.
இப்புத்தகத்தின் செய்தி, மிகவும் தெளிவாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது.
மீகா 6: 8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார், நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
- நியாயஞ்செய்
- இரக்கத்தை சிநேகி
- உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நட.
மீகாவின் தொகுப்பு:
(மொத்தம் 7 அதிகாரங்கள் உள்ளன. 3 பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்)
- அதிகாரங்கள் 1-2: தேவன் நியாத்தீர்ப்போடு வருகிறார்.
- தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் (1)
- மக்களுடைய பாவங்கள் (2: 1-11)
- வாக்குப்பண்ணப்பட்ட புதுப்பிக்கப்படுதல் (2: 12-13)
- அதிகாரங்கள் 3 முதல் 5: தேவன் சமாதானத்தோடு வருகிறார்.
- மிதமிஞ்சிய துன்மார்க்கம் (3)
- வரவிருக்கும் காலம் (4): ஆயிரவருட அரசாட்சி.
மீகா 4: 7 கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.
மீகா 4: 1-2 ஆனாலும் கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயா்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதனிடத்திற்கு ஓடிவருவார்கள். 2. திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள், ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
- இப்பொழுதிருக்கும் வேதனை (4: 9 முதல் 5: 1 பிரசவ வேதனை)
- மேசியாவைக்குறித்த வாக்குத்தத்தங்கள் (5: 1-15)
மீகா 5: 2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார், அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.
மீகா 5: 12-15 சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன், நாள் பார்க்கிறவார்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள். 13. உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன், உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய். 14. நான் உன் விக்கிரகத் தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து, 15. செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.
III. அதிகாரங்கள் 6-7: தேவன் இரக்கத்தோடு வருகிறார்.
- தம் ஜனத்திடம் தேவ கெஞ்சுதல் (6: 1-8)
- பாவத்திற்கு விரோதமாக தேவ கதறுதல் (6: 9-16)
- தீர்க்கதரிசியின் புலம்பல் (7: 1-7)
- தீர்க்கதரிசியின் நம்பிக்கை (7: 8-13)
- தீர்க்கதரிசியின் விண்ணப்பம் (7: 14-17)
- தீர்க்கதரிசியின் துதி (7: 18-20)