The Good Samaritan ✞ நல்ல சமாரியன்
லூக்கா 10-ல், "மிக முக்கியமான கட்டளை என்ன?" என்று இயேசுவிடம் கேட்கப்படுகிறது. "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" என்பதே மிகப் பெரிய கட்டளை என்றும், இரண்டாவது, "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" என்றும் அவர் பதிலளிக்கிறார். அண்டை வீட்டாராக யார் எண்ணப்படுகிறார்கள் என்று இயேசு உடனடியாக கேட்கப்பட்டார், மேலும் அவர் அன்றாட வாழ்க்கைக்கு ஒரு உதாரணம் அல்லது கதை பாடத்துடன் பதிலளித்தார்.
நல்ல சமாரியனின் உவமை
25. அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
26. அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28. அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
29. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
32. அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
33. பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35. மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.
நல்ல சமாரியன் பற்றிய வர்ணனை
நல்ல சமாரியனின் உவமை நாம் அனைவரும் அறிந்த ஒரு உவமையாகும். எல்லா மதத்தினரும் இந்த உவமையை பயன்படுத்துவதுண்டு. ஆண்டவர் இந்த உவமையைப் பல்வேறு காரணத்திற்காக கூறினார்.
இயேசுவைச் சுற்றியிருந்த ஜனங்களின் மத்தியிலே அநேகர் அவரது வார்த்தையை வாஞ்சையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு நியாய சாஸ்திரி அங்கு வருகிறார். நியாய பிரமாணத்தை நன்கு கற்றவர்கள்தான் நியாய சாஸ்திரிகள். கற்றது மட்டுமல்ல, அதை கைக்கொள்ளுகிறவர்களுமாய் இருந்தார்கள். இவர்கள் நியாயப்பிரமாணத்திலே எழும்புகிற கேள்விக்கெல்லாம் சரியான விளக்கம் தருவார்கள். இப்படிப்பட்ட நியாய சாஸ்திரிகளில் ஒருவன் எழுந்து ஆண்டவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். அவன் கேட்டதின் நோக்கம், தான் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது அவனுடைய நோக்கம் அல்ல. இயேசுவை சோதிப்பதற்காகவே அந்த கேள்வியைக் கேட்டான். “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்திரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்” (லூக்கா 10:25-27). உடனே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அந்த நியாயசாஸ்திரியைப் பார்த்துச் சொல்லுகிறார்: “நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்” (லூக்கா 10:28).
இந்த மனிதன் தன்னை நீதிமானாக காட்டிக் கொள்ள மறுபடியும் ஒரு கேள்வி கேட்கிறான்: “ஆண்டவரே, எனக்குப் பிறன் யார்” என்றான். அப்பொழுதுதான் ஆண்டவர், இந்த உவமையைச் சொன்னார். யூதர்களுக்கு யூத தலைவர்களுக்கு மார்க்க தலைவர்களுக்கு, நியாய சாஸ்திரிகளுக்கு, பரிசேயர்களுக்கு, சதுசேயர், வேத பாரகர்களுக்கெல்லாம், யூதர்களுக்கு பிறன் யூதன்தான் என்பது அவர்களுடைய எண்ணம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த மனிதர்களிடம் சொன்னது என்ன? “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றார்” (லூக்கா 10:27).
நியாயப்பிரமாணம் என்ன சொல்லுகிறது? தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் தேவன்மேல் அன்பு கூரவேண்டும், மனிதன்மேல் அன்புகூர வேண்டும். மனிதன் அன்புகூருவது நியாயப் பிரமாணத்தின் போதனையாகும். உன்னிடத்திலே அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும். நாம் என்ன நினைக்கிறோம்? பிறன் என்றவுடன் பக்கத்திலிருக்கிறவன், நமது குடும்பத்தார், நமது சபையார் என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால் பிறன் என்பதற்கு வித்தியாசமான அர்த்தம் வருகிறது. யூதனுக்கு பிறன் யூதன் என்ற பாரம்பரிய எண்ணத்தை உடையவர்களாயிருந்தனர். ஆனால் ஆண்டவர் அந்த சிந்தையைத் தகர்க்க விரும்புகிறார். யூதனுக்கு பிறன் யூதனல்ல, ஏனென்றால் ஆண்டவர் வாழ்ந்த காலத்திலே யூதர்கள் சமாரியர்கள் ஆகிய இரண்டு பேருக்கும் இனப்பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. யூதர்கள் தங்களை உயர் குலத்தவர்களாகவும், சமாரியர்களை தாழ்ந்த மக்களாகவும் எண்ணிக் கொண்டு இருந்தார்கள். சமாரியப் பெண்ணிடம் போய் இயேசுவானவர் தண்ணீர் கேட்டபோது நீர் யூதனாய் இருக்க சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்கலாமா என்று வினாவினதின் காரணம் என்ன? அந்நாட்களில் இனப்பிரச்சனை தலைவிரித்து ஆடின காலம். ஆனால் நமது ஆண்டவர் ஒருநாளும் இனப்பிரச்சனைகளுக்கு ஆதரவு கொடுப்பவர் அல்ல.
இந்த நல்ல சமாரியனின் உவமையை சொல்லுவதின் நோக்கம் என்ன தெரியுமா? யூதனுக்கு பிறன் யூதனல்ல, யூதனுக்கு பிறன் தன் இனத்தான் அல்ல. யூதனுக்கு பிறன் யார் என்றால் இவர்கள் யாரை வெறுத்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்கள்தான் பிறன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். இந்த நியாய சாஸ்திரி போல உன்னுடைய பிறன் யாரென்றால் உன்னுடைய தம்பி, இனத்தான், சபையார் என நீ எண்ணிக்கொண்டு இருக்கலாம். உண்மையான பிறன் யார் தெரியுமா? தேவை நிறைந்தவர்கள்தான். இதற்காகவே ஆண்டவர் இந்த நல்ல சமாரியனுடைய உவமையைச் சொன்னார்.
ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போனான்.
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின் மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய் அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால் நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான் (லூக்கா 10:30-37). இப்படியிருக்க, கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்?
முதலாவதாக தேவையுள்ளவன்தான் நமக்கு பிறன். இரண்டாவதாக நமக்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்கள்தான் உண்மையாக பிறனாக காணப்படுகிறார்கள். இந்த உவமையிலே ஆண்டவர் சில உண்மையைச் சொல்லியிருக்கிறார். ஆசாரியன், லேவியர் இரண்டு பேருமே மார்க்க தலைவர்கள். யூத சமயத்திலே உயர்ந்த பதவியை உடையவர்கள், ஆராதனை நடத்துகிறவர்கள், வேதத்தை வியாக்கியானம் செய்கிறவர்கள், தங்கள் மார்க்கப் பாரம்பரியங்களிலே ஜாக்கிரதையுள்ள ஜனங்கள். இந்த ஆசாரியனும், லேவியனும் போகிறார்கள். இந்த இரண்டுபேரும் குற்றுயிராக கிடக்கிற மனிதனைக் கண்டு விலகிப் போனார்கள். பிறகு சமாரியன் ஒருவன் வருகிறான். இந்த உவமையிலே மூன்று யூதன் ஒரு சமாரியன். காயப்பட்டவன் சமாரியன் என்று ஆண்டவர் சொல்லவில்லை. ஒருவன் காயப்பட்டு குற்றுயிராக இருக்கிற யூதன், இன்னொருவன் ஆசாரியன், இன்னொருவன் லேவியன், இன்னொருவன் சமாரியன். இதிலே மூன்று குறிப்புகளை கற்றுக்கொள்ளலாம்.
தங்களது ஆன்மீக வாழ்க்கையிலே எது முக்கியம் என்பதை ஆசாரியனும், லேவியனும் உணராமல் போனார்கள். ஆண்டவரில் அன்பு கூர்ந்து நம்மில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூரவேண்டும் என்பதே நமது ஆன்மீக வாழ்க்கையிலே முக்கியமானதாகும். இதுதான் நியாயப்பிரமாணமும்கூட. இந்த ஆசாரியனும், லேவியனும் ஆண்டவரில் முழுமையாக அன்புகூர்ந்தார்கள், முழுமனதோடு நேசித்தார்கள். ஆனால் தங்களை நேசித்ததைப்போல காயப்பட்ட அவன்மேலே அன்புகூராமல் போனார்கள். இந்த ஆசாரியனிடத்திலும் லேவியனிடத்திலும் இருந்த முதல் தன்மை வாழ்க்கையில் எது பிரதானம், எது அவசியம் என்பதை உணராமல் போனார்கள். குற்றுயிராய் கிடக்கிற மனிதனுக்கு உதவிசெய்வதும், தேவையுள்ள மனிதனுக்கு உதவிசெய்வதும் ஒருவகையில் தேவனை ஆராதிப்பதாகும் என்பதை உணரவில்லை. தேவனுக்கு செய்கிற ஊழியத்திலே அதுவும் ஒன்று என்பதை உணராமல் போனார்கள். அவர்கள் தங்கள் மார்க்கப் பாரம்பரியத்தையும், தங்களது கடமைகளையும் முக்கியப்படுத்தினார்களேயொழிய உதவி செய்வதற்கு மறுத்தார்கள். இறந்துபோனவரை தொட்டால் அவர்கள் தீட்டுபட்டவர்கள் ஆவர். இவன் குற்றுயிராய் கிடக்கிறான். இவனை தொடுவதினால் தீட்டுப்பட்டால் ஒதுங்கி, தங்கள் சுத்திகரிப்புக்கு சில நாட்களை செலவுபண்ண வேண்டும். இதனால் அநேக சங்கடங்கள், எதிர்கால விளைவுகள் வரும் என எண்ணி அவர்கள் ஒதுங்கி போயிருக்கலாம். ஆனால் வாழ்க்கையிலே எது பிரதானம் என்பதை உணராமல் போனார்கள்.
முதலாவதாக வாழ்க்கையின் கடமைகள், ஆராதனை முறைகள், மார்க்க தன்மைகள் அவர்களை நன்மை செய்யமுடியாதபடி கட்டிப்போட்டது. நான் இதைக் கற்பனையாக சொல்லுகிறேன்: இரண்டு பேரும் வேகமாக ஆராதனைக்கு போகிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக போகவேண்டும்; குற்றுயிராக கிடக்கிற மனிதனைத் தூக்கி எடுத்து அவனை பாதுகாத்து சத்திரத்தில் சேர்க்கிறதற்குள்ளாக எத்தனையோ தடங்கல்கள் ஏற்படும். இதனால் அவர்கள் உதவி செய்யாமல் போயிருக்கலாம். சிலசமயங்களில் நமது கடமைகள், நமது மார்க்க பாரம்பரியங்கள், நமது ஆராதனையின் சூழ்நிலைகள் நாம் அநேக நன்மைகளை செய்யமுடியாதபடி தடுத்துவிடுகின்றன. ஆண்டவருடைய சீஷத்துவ வாழ்க்கையை வாழ்கின்ற உன் வாழ்க்கையிலே உன்னுடைய மார்க்க அறநெறி கோட்பாடுகள்கூட, உன் பாரம்பரிய பழக்கங்கள்கூட, உன் ஆராதனைக்குரிய நெறிபாடுகள்கூட அநேக நன்மைகளை செய்யாதபடி தடுத்து போடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதை மேற்கொள்ள அழைக்கப்படுகிறாய்.
இரண்டாவதாக இந்த மனிதர்கள் இந்த ஆசாரியனும், லேவியனும் ஆண்டவருக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பை இழந்துபோனார்கள். ஆண்டவர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: நான் பட்டினியாயிருந்தேன். எனக்கு ஆகாரம் கொடுத்தீர்கள், நான் வியாதியாயிருந்தேன் என்னை விசாரிக்க வந்தீர்கள், நான் அந்நியனாயிருந்தேன் என்னை சேர்த்துக்கொண்டீர்கள் என்று சொன்னார். அப்பொழுது அந்த ஜனங்கள் கேட்டார்கள்: நீர் எப்பொழுது ஐயா இந்த நிலையில் இருந்தீர். உடனே ஆண்டவர் சொன்னார்: மிகவும் சிறியவராகிய என் சகோதரரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் (மத்தேயு25:40) தேவையுள்ள மனிதர்களுக்கு நாம் செய்கிற உதவி, ஆபத்தில் சிக்குண்ட மக்களுக்கு நாம் செய்யக்கூடிய உதவி அது ஆண்டவருக்கே செய்கிற உதவி. ஆண்டவர் மனிதர்களை தம்முடைய சாயலாக படைத்தார். தம்முடைய சாயலாக படைத்த மனுக்குலத்திற்கு செய்கிற உதவி அது ஆண்டவருக்கே செய்கிற உதவி என்பதையும் அதுவே வாழ்க்கையிலே பிரதானம் என்பதையும் அவர்கள் அறியவில்லை. கடமைகள், மத பாரம்பரியங்கள், ஆராதனை முறைகள் தங்களை நன்மை செய்யாதபடி தடுக்கிறது என்பதை உணரவில்லை.
மூன்றாவதாக மனிதருக்கு உதவி செய்வதின் மூலம் ஆண்டவரை சேவிக்கிறோம், அவருக்கு மகிமையை கொண்டுவருகிறோம் என்பதை உணராமல் போனார்கள். பெரிய ஒரு நல்ல வாய்ப்பை இழந்துபோனார்கள். தாங்களே அந்த மனிதனுக்கு பிறன் என்பதையும் காண்பிக்கக்கூடிய அந்த சிலாக்கியத்தையும் இழந்துபோனார்கள். ஏழைக்கு நாம் செய்கிற உதவியும், ஏழைக்கு இரங்குவதும் கர்த்தருக்கு கடன் கொடுப்பதாகும். நீ கொடுத்தால் அதை தேவன் திரும்ப கொடுப்பார். நாம் மனிதர்களுக்கு செய்யக் கூடிய உதவியை நாம் செய்யாமல்போனால் நாம் தடுமாறினவர்களாயிருப்போம். அநேக சமயங்களிலே பரவசத்திலே வாழ்கிறோம். அநேக சமயங்களில் ஆவிக்குரிய வரங்களிலே வளர்ந்து செல்லப் பிரயாசப்படுகிறோம். ஆனால் அடிப்படை உண்மையான “பிறருக்கு உதவி செய்வதை, நன்மை செய்வதை மறந்துவிட்டால்” அது தேவபிரமாணத்தை மீறுவதற்கு சமமாகும். இதைத்தான் அந்த நியாயசாஸ்திரிக்கு உணர்த்துவதற்காக சொன்னார். தேவையுள்ள மக்களுக்கு உதவி செய்வதுதான் பிரமாணத்தைக் கைக்கொள்வதாகும். நாம் பிறருக்கு சேவை செய்வோம், நன்மை செய்வோம். அதுவே ஆண்டவருக்கு நாம் செய்கிற ஆராதனை என்பதை புரிந்து கொள்வோம்.
மேலும் இந்த உவமையிலே ஆண்டவர் கற்றுக் கொடுக்கிற போதனை என்னவென்றால் அன்பு. உண்மையான அன்பு என்றால் என்ன? உண்மையான அன்பைக் குறித்து கேள்வி கேட்ட நியாய சாஸ்திரிக்கு ஆண்டவர் சரியான பதில் கொடுக்கிறார், சரியான விதத்திலே அந்த அன்பை விளக்குகிறார். லூக்கா 10:37ல் அதற்கு அவன் இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி, “நீயும் போய் அந்தப்படியே செய்” என்றார். தேவையுள்ளவர்களுக்கு இரக்கம் பாராட்டி உதவி செய்வதே அன்பு. இதைதான் நாம் இந்த உவமையிலே கற்றுக்கொள்கிறோம். பிரமாணத்தைப் பார்த்தால் அன்பை இவ்வாறு மூன்றாக பிரிக்கலாம்.
1. தேவன்மேல் உள்ள அன்பு,
2. நம்மேல் உள்ள அன்பு,
3. பிறர்மேல் உள்ள அன்பு.
தேவனிடத்தில் நாம் எப்படி அன்புகூர வேண்டும்? முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு சிந்தையோடும், முழுப் பலத்தோடும் அன்பு கூரவேண்டும். இதன் பொருள் என்னவென்றால் முழுமையாய் தேவனிடத்தில் அன்பு கூரவேண்டும். ஆண்டவரிடத்தில் காட்டுகிற அன்பைக் காட்டிலும் வேறு எவரிடத்திலும் காட்டக்கூடாது. நாம் எல்லாரையும் நேசிக்கலாம், அன்பு கூரலாம் மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் மீது நாம் அன்பு கூரலாம். இதைக் காட்டிலும் தேவன்மேல் வைக்கிற அன்பு உயர்ந்ததாக, கனமுள்ளதாக காணப்பட வேண்டும்.
இரண்டாவது நாம் நம்மில் அன்புகூர வேண்டும். நாம் நம்மில் அன்புகூருவது தவறு என்றும், சுயநலம் என்றும் நம்மில் அநேகர் சொல்லுவதுண்டு. ஆனால் ஆண்டவர் இவ்வாறு சொன்னார்: உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல என்று. நாம் நம்மில் எப்படி அன்புகூர வேண்டுமென்றால் தேவ அன்பின் அடிப்படையில் நாம் நம்மில் அன்புகூர வேண்டும். நாம் நம்மில் அன்புகூரவில்லை என்றால் எப்படி பிறர்மேல் அன்பு கூரமுடியும். நல்ல சமாரியன் உவமையின் மூலம் நாம் கற்றுக்கொள்கிற உண்மையென்ன? தேவையுள்ளவர்களுக்கு உதவுவதே உண்மையான அன்பாகும். ஆண்டவர் கேட்டார்: இந்த மனிதனுக்கு யார் பிறன்? அவனுக்கு இரக்கம் செய்தவனே என்று உடனே நியாயசாஸ்திரி சொல்லுகிறான். அன்பை இரக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறவனே அன்புள்ளவன். யூதனுக்கு யூதன் பிறன் அல்ல, யூதன் கடுமையாக விரோதிக்கிற அந்த சமாரியன் அன்புக்காக ஏங்குகிறவன். அந்த சமாரியன்தான் பிறன் என்று சொல்லுகிறார்.
நீ வாழ்கிற குடும்பத்திலே, உன்னைச் சுற்றி உள்ள சமுதாயத்திலே, உன் ஆராதனை ஸ்தலத்திலே எத்தனையோ பேர் இரக்கத்திற்காக ஏங்குகிறார்கள். உதவி செய்யமாட்டார்களா, ஆதரவு கொடுக்க மாட்டார்களா, அன்பு செலுத்தமாட்டார்களா என்று தவிக்கிற அநேகர் உண்டு. அப்படிப்பட்ட மக்களுக்கு நாம் இரக்கம் பாராட்டுவதுதான் உண்மையான அன்பு. நாம் மனிதர்களிடம் அன்புகூராவிட்டால், நாம் தேவனிடத்தில் அன்புகூர முடியாது. தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தேவசாயலாய் படைக்கப்பட்ட மனிதர்களிடம் அன்புகூருவான். ஒருவன் தன் சொந்த சகோதரனிடம் அன்புகூரவில்லை என்றால் காணாத தேவனிடம் எப்படி அன்புகூருவான். காண்கிற சகோதரனிடம் அன்புகூருகிறவன்தான் காணாத தேவனிடம் அன்புகூருவான். இரக்கம் செய்வது தான் உண்மையான அன்பாகும். ஆண்டவரின் சாயலாய் படைக்கப்பட்ட மனிதர்களிடம் அன்புகூருவதே உண்மையான அன்பாகும். இந்த அன்பில் ஜாதியோ, மொழியோ, தேசமோ ஆகிய இவைகளைச் சார்ந்திருந்து அன்புகூருவதை மட்டுப்படுத்தக் கூடாது. எல்லா மரபுகளையும் தாண்டி அன்பு கூருவதுதான் தேவ அன்பாகும். ஆண்டவர் இந்த போதனையைச் சொல்லி விட்டு, இதை அறிந்துகொண்ட நீ அந்தப்படியே செய் என்றார். சத்தியத்தை, இரக்கம் செய்யும் ஆலோசனையைப் புரிந்துகொண்ட நாம், கேட்டவர்களாய் இல்லாமல் அப்படியே செய்கிறவர்களாய் மாறுவோம்.
உண்மையான அன்பு எது என்று புரிந்து கொண்ட நாம் இரக்கத்தின் அடிப்படையிலே செயல்படுத்தவும், நம் வாழ்க்கையிலே செயல்படும்படியும் அழைக்கிறார். நீயும் போய் அந்தப்படியே செய். கேட்கிறவர்களாய் மாத்திர மல்ல, செய்கிறவர்களாய் மாறவேண்டும் என்று ஆண்டவர் கற்றுக்கொடுக்கிறார். என் வார்த்தையைக் கேட்டு அதன்படி செய்கிறவனெவனோ அவன் கற்பாறையின் மேல் கட்டின மனிதன் என்று சொல்கிறார். இந்த சமாரியன் தன் இனத்தானல்ல, ஆனாலும் அவன்மேல் அன்பு கூர்ந்தான், மனதுருகினான். மரபுகளை தாண்டி அன்புகூருகிறவன் தன்னிடத்தில் உள்ளதை அவனுக்கு பகிர்ந்துகொடுத்தான். தன் வாகனத்தில் ஏற்றி சத்திரத்திலே சேர்த்து அவனுக்கு செய்யவேண்டிய எல்லா காரியத்தையும் செய்துவிட்டு கடந்து போனான். இதுவே உண்மையான அன்பு!