History of Holy Bible in Tamil 𓆩𓆪 தமிழ் பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு

பரிசுத்த வேதாகமம் வரலாற்றில் புதுமை, அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு தனித்துவமானதொன்றாகும். இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் நீண்டகால சரித்திரத்தைக் கொண்டுள்ளது. இது தனி ஒரு மனிதனது முயற்சியினால் உருவான மொழிபெயர்ப்பல்ல. தமிழில் வேதாகமத்தை மொழி பெயர்க்கும் பணியில் பலர் ஈடுபட்டிருந்தனர். ஆரம்பத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் வேதாகமம் பிற்காலத்தில் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. 250 வருடகாலத்தில் புதிய ஏற்பாடு 8 தடவைகளும் முழுவேதாகமமும் 6 தடவைகளும் திருத்தப்பட்டுள்ளன. தமிழ் வேதாகமம் ஆரம்பத்தில் ‘சத்தியவேதம்’ எனும் பெயரிலேயே வெளிவந்தது. பிற்காலத்திலேயே ‘பரிசுத்த வேதாகமம்’ எனும் பெயரைப் பெற்றது. இதன் தனித்துவமான வரலாற்றை இப்பகுதியில் பார்ப்போம்.

இந்திய இலக்கிய வரலாற்றில் தமிழ்மொழி சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சிடப்பட்ட புத்தகம், தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்டுள்ளது. போர்த்துக்கீசியர் இந்தியாவில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்பும் காலத்தில் தமிழ் மக்களது உபயோகத்திற்காக 1554 ஆம் ஆண்டு, ஐரோப்பாவிலுள்ள ‘லிஸ்பன்’ எனும் நகரில் ஒரு கிறிஸ்தவ வினா விடை புத்தகம் தமிழில் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் 1577 ஆம் ஆண்டு இயேசு சங்கம் எனும் மிஷனரி இயக்கத்தைச் சேர்ந்த கொன்சல்வெஸ் என்பவர் முதல் தடவையாக இந்தியாவிலுள்ள கொல்லம் என்ற இடத்தில் தமிழ் அச்செழுத்துக்களை வார்த்தெடுத்தார். இச்சங்கத்தைச் சேர்ந்த ஹென்றிக்ஸ் என்பவர் 1578 இல், தம்பிரான் வணக்கம் எனும் பெயரில் ஒரு கிறிஸ்தவ புத்தகத்தை கொல்லம் எனுமிடத்தில் அச்சிட்டு வெளியிட்டார். 16 பக்கங்களைக் கொண்டிருந்த இப்புத்தகத்தில் கர்த்தருடைய ஜெபமும், பத்துக் கற்பனைகளும், அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணமும், சில ஜெபங்களும் தமிழில் அச்சிடப்பட்டிருந்தன. இதுவே இந்தியாவில் அச்சிடப்பட்ட முதலாவது புத்தகமாகும். இது மறுபடியுமாக 1579 இல் 112 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது. இவற்றில், தமிழ் எழுத்துக்கள் அக்காலத்து முறைப்படி இருப்பதை கவனிக்கலாம். அக்காலத்தில் மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளியிடும் வழக்கம் இருக்கவில்லை. உதாரணமாக, ‘க்’ எனும் எழுத்து ‘க’ என்றே எழுதப்பட்டது. அத்தோடு, ர கரத்துக்கு கீழே கால் இருப்பதில்லை. அதாவது ‘ர’ அக்காலத்தில் ‘ா’ என்றே எழுதப்படும். அதேபோல, இரட்டைக்கொம்பு உபயோகிக்கப்படவில்லை. அதாவது, நேசம் என்பது ‘நெசம்’ என்றே எழுதப்பட்டது. மேலும், ‘ற’ எனும் எழுத்து ‘அ’ எனும் எழுத்து கீழ் வயிறு இல்லாமல் எழுதப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவிலேயே, ‘கான்ஸ்டன்டைன் பெஸ்கி’ எனும் போர்த்துக்கீசிய மிஷனரி மெய்யெழுத்தின் மேல் புள்ளியிடும் முறையையும், ரகரத்துக்கு கீழே கால் அமைக்கும் முறையையும், ஏகார ஓகார உயிர்மெய் எழுத்துக்களுக்கு இரட்டைக்கொம்பு உபயோகிக்கும் முறையையும், அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்த போர்த்துக்கீசிய மிஷனரிகள் பல தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ள போதிலும், அவர்கள் ஒருசில வேதப்பகுதிகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்தனர். முழுவேதாகமத்தையும் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் அவர்கள் அப்போது ஈடுபடவில்லை.

வேதாகமத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு முதன்முதலில் இலங்கையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், 16 ஆம் நூற்றாண்டில் இலங்கை வந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் 1566 இல், இலங்கையின் வட மேற்குப்பகுதியிலுள்ள மன்னார் தீவில் அச்சகமொன்றை உருவாக்கி சில தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டபோதிலும், அவர்களும் வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. 17ஆம் நூற்றாண்டில் இலங்கை வந்த ஒல்லாந்து நாட்டு சீர் திருத்த சபையைச் சேர்ந்த மிஷனரிகளே முதல் முதலில் தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் முயற்சிகளை இலங்கையில் ஆரம்பித்தவர்களாவர். இவர்களுள் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்து சீர்திருத்த சபையில் பணியாற்றிய பிலிப்புஸ் பல்தேயுஸ் என்பவர், 1660 அளவில் மத்தேயுவின் சுவிசேஷத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். இம்மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்ட புத்தகமாகாதபோதிலும், பனை ஓலை ஏடுகளில் எழுதப்பட்ட இதன் பிரதிகள் யாழ்ப்பாண கிறிஸ்தவர்களால் உபயோகிக்கப்பட்டுள்ளன. பிலிப்புஸ் பல்தேயுஸ் கர்த்தருடைய ஜெபம், பத்துக் கற்பனைகள், விசுவாசப்பிரமாணம் என்பவற்றையும் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இவர் தன் சொந்த நாட்டுக்குச் சென்ற பின் அவற்றை ஒரு சிறு துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். பின்னர் கீழ்த்திசை நாடுகளில் தனக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றி அவர் எழுதிய நூலிலும் அவற்றையும் சேர்த்துள்ளார்.

இலங்கையை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் (17ஆம் நூற்றாண்டில்) வேதாகமத்தைத் தமிழில் மொழி பெயர்க்க அவர்கள் எடுத்த முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறவில்லை. 1665இல் பிலிப்புஸ் பல்தேயுஸ் இலங்கையை விட்டுச் செல்ல வேண்டியிருந்தமையினால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு முயற்சி மத்தேயு சுவிசேஷத்தோடு நின்றுவிட்டது. 1692 இல், ஏட்ரியான்ஸ் டீ மே எனும் ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த மிஷனரி, யாழ்ப்பாணத்தில் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது மொழிபெயர்ப்பும் அச்சிடப்பட்ட புத்தகமாகவில்லை. அதன் பின்னர், 1694இல் ஒல்லாந்து அரசாங்கம் பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்க எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. 1736இல், இம்ஹொஃப் என்பவர் ஒல்லாந்தின் தேசாதிபதியாக இலங்கையில் பணியாற்றியபோது, வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி கிராமர் எனும் மிஷனரிக்குக் கட்டளையிட்டார். எனினும், புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கிய இவர் சடுதியாக மரணமடைந்தமையினால், இம் மொழிபெயர்ப்புப் பணியும் தடைப்பட்டது. 1741இல் கிராமர் மொழி பெயர்த்த மத்தேயு சுவிசேஷம் மட்டும் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் பின்னர் 1742இல் நான்கு சுவிசேஷப் புத்தகங்களும் தமிழில் அச்சிடப்பட்டன. இதன் பிரதி ஒன்று பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்தின் லண்டன் அலுவலகத்தில் உள்ளது. இதன் பின்னர் 1746 இல், பிலிப் டீ மெல்லோ என்பவரது முயற்சியினால் நான்கு சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் 1748இல் கொழும்பில் பிரசுரிக்கப்பட்டது. இதன் பிரதி ஒன்று கொழும்பு நூதனசாலை நூல் நிலையத்தில் இருக்கின்றது. பிலிப் டீ மெல்லோ 1750 அளவில் புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். 1753 இல், சங்கீதப் புத்தகங்கள் தமிழில் தனியாக ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. 1759 இல் டீ மெல்லோவின் புதிய ஏற்பாடு அச்சிடப்பட்டது.

18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிரித்தானியர் ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையைக் கைப்பற்றினர். அதேசமயம், இலங்கைக்கு வந்த பிரித்தானிய சபைகளின் மிஷனரிகள், ஒல்லாந்தருடைய சீர்திருத்த சபையோடு தம்மை சம்பந்தப் படுத்திக்கொள்ள விரும்பாதமையினால், அவர்கள் ஒல்லாந்தர் வெளியிட்ட புதிய ஏற்பாட்டை உபயோகிக்கவில்லை. இதனால், ஒல்லாந்தருடைய தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகள் அவர்களோடு இலங்கையிலிருந்து இல்லாமல் போய்விட்டன. அவற்றின் ஒரு சில பிரதிகள் மட்டும் இன்று சில நூலகங்களிலும் நூதன சாலைகளிலும் (தேசிய அருங்காட்சியகம்) உள்ளன. வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்க இலங்கையில் எடுக்கப்பட்ட ஆரம்ப முயற்சிகள் அனைத்தும் முழுமையாக வெற்றியளிக்காத போதிலும், இந்தியாவில் பல ஆக்கபூர்வமான மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் 1871 ஆம் ஆண்டு, சென்னை வேதாகமச் சங்கம் வெளியிட்ட ஒன்றிணைப்புப் பதிப்பு எனும் மொழிபெயர்ப்பேயாகும். இது தமிழில் ஐக்கிய பதிப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. எனினும், இதற்கும் முன்பே சில மொழி பெயர்ப்புகள் இந்தியாவில் வெளிவந்துள்ளன. தமிழ்வேதாகமத்தின் தனித்துவமான வரலாற்றில் அம்மொழி பெயர்ப்புகள் முக்கியமானவைகளாகும்.

👩 சீகன்பால்க் மொழிபெயர்ப்பு (Bartholomäus Ziegenbalg)

தமிழில் முதல் தடவையாக வேதாகமத்தை மொழிபெயர்த்து வெளியிட்டவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பர்த்தலோமேயு சீகன்பால்க் என்பவராவார். 1628 ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள புல்சினிட்ஸ் எனுமிடத்தில் பிறந்த இவர், தனது 24 ஆவது வயதில் தமிழ் நாட்டுக்கு ஒரு மிஷனரியாகப் பணிபுரிய வந்தார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அநாதையாகிய இவர், தனது 16 ஆவது வயதில் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றதோடு, “ஐரோப்பாவில் நூறு பேரை இயேசுவுக்குள் கொண்டு வருவதை விட, புறமதத்தவர் வாழும் நாட்டில் ஒரு ஆத்துமாவை ஆதாயப்படுத்துவது மேலானது” எனும் ‘ஓபட் பிரைட் தெளப்ட்’ என்பவரது பிரசங்க வார்த்தைகள் காரணமாக மிஷனரியாகப் பணிபுரிய வேண்டும் எனும் வாஞ்சை கொண்டு, 1706 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் தேதி தென்னிந்தியாவிலுள்ள தரங்கம்பாடி எனுமிடத்திற்குத் தன் நண்பரான புளூட்சோ என்பவருடன் வந்து சேர்ந்தார்.

அக்காலத்தில், தரங்கம்பாடியில் டென்மார்க்கைச் சேர்ந்த வியாபாரிகளும் அரச அதிகாரிகளும் பெருமளவில் இருந்தனர். டென்மார்க்கின் அரசன், தன் நாட்டவர் வாழுமிடங்களில் கிறிஸ்தவத்தைப் பரப்பவேண்டும் என்பதற்காகவே ஜெர்மனியரான சீகன்பால்க்கையும், புளூட் சோவையும் இந்தியாவுக்கு அனுப்பியிருந்தான்.

சீகன்பால்க்கும் புளூட்சோவும் அரச அனுமதியுடன் வந்திருந்தபோதிலும் அச்சமயம் தரங்கம்பாடியிலிருந்த டென்மார்க் அதிகாரிகள், மிஷனரிகள் தமது குடியிருப்புப் பிரதேசத்துக்கு வருவதை விரும்பவில்லை. மிஷனரிகள் தமது உல்லாச வாழ்வுக்கு எதிராகப் பிரசங்கம் செய்வார்கள் என்பதினால், அவர்கள் சீகன் பால்க்குக்கும் புளூட்சோவுக்கும் உரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை. இவர்கள் வந்த கப்பலிலிருந்த அனைவரும் கரைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோதிலும், இவர்களிருவரும் சிலநாட்கள் கப்பலிலேயே இருக்க வேண்டியதாயிற்று.

பின்னர் தமிழ் மக்களது உதவியுடன் இருவரும் கரைசேர்ந்தனர். எனினும், இவர்கள் கரைக்கு வந்தவுடன் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை கடற்கரையிலேயே நிற்கவேண்டியதாயிருந்தது. சீகன்பால்க்கும் புளூட்சோவும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை வாசித்தவாறே கடற்கரையில் இருந்தனர். இவர்களுக்கு குடிப்பதற்குக்கூட தண்ணீர் கொடுக்கப்படவில்லை. எனினும், இவர்கள் டென்மார்க் அரசின் கட்டளைப்படி வந்திருந்தமையினால் கடைசியில் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தரங்கம்பாடியிலிருந்த டென்மார்க் அதிகாரிகள் சீகன்பால்க்குக்கும் அவரது நண்பருக்கும் எவ்வித உதவியும் செய்யாதபோதிலும், தேவன் அற்புதமான முறையில் அச்சமயம் அங்கிருந்த ஒரு ஜெர்மன் நாட்டவர் மூலம் இவர்களுக்கு உதவினார். சீகன்பால்க் தரங்கம்பாடியில் ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். சீகன் பால்க்கும் புளூட்சோவும் பாடசாலைப் பிள்ளைகளுடன் தரையில் உட்கார்ந்து, விரலினால் தமிழ் எழுத்துக்களை மணல்தரையில் எழுதுவதன் மூலமாக தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினர். இவர்களுக்கு முதலியப்பன் என்பவர் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுத்தார்.

சீகன்பால்க் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 8 மணி வரை முதல் நாளில் தான் கற்ற தமிழ்ச் சொற்களை மனப்பாடமாய்ச் சொல்வார். 8 மணி முதல் 1 மணிவரையும், பின்னர் மாலை 3 மணி முதல் 5 மணிவரையும் தமிழ்ச் சுவடிகளைப் படிப்பார். மறுபடியும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை யாராவது ஒருவரைத் தமிழ்ப் புத்தகங்களை வாசிக்கச் சொல்லிவிட்டு அதைக் கவனித்துக் கேட்பார். இவ்விதமாக 8 மாதங்களில் சீகன் பால்க் தமிழில் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். சீகன்பால்க் தமிழ் நாட்டில் இருந்த காலத்தில் மொத்தம் 119 தமிழ் நூல்களைக் கற்றுள்ளார். இப்புத்தகங்கள் மூலமாக மட்டுமல்ல, தமிழ் மக்களுடன் பேசுவதன் மூல மாகவும் தமிழைத் தன்னுடைய சொந்த மொழிபோல் அறிந்திருந்தார்.

சீகன்பால்க் ஆரம்பத்தில் ஒரு சில பிரசங்கங்களையும், லூத்தரன் சபையின் உபதேசங்களையும், ஒரு சில துண்டுப்பிரசுரங்களையும் தமிழில் எழுதினார். எனினும், அவரது இலட்சியமாக இருந்தது தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பேயாகும். தரங்கம்பாடியில் போர்த்துக்கீசிய மொழியைப் பேசும் பலர் அக்காலத்தில் இருந்தமையினால், சீகன்பால்க்கோடு வந்த அவரது நண்பர் புளூட்சோ போர்த்துக்கீசிய மொழியைப் படிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியமையினால், சீகன்பால்க் தனித்தே மொழி பெயர்ப்பு வேலைகளைச் செய்ய வேண்டியதாயிருந்தது. சீகன்பால்க் இப்பெரிய பணியை ஆரம்பிப்பதற்கு முன்பு ஊக்கமாய் ஜெபித்து, உற்சாகத்தையும் தேவவழி நடத்துதலையும் பெற்று, 1708ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு வேலைகள் 1711 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூர்த்தியடைந்தன.

சீகன்பால்க்கின் மொழிபெயர்ப்பு வேலைகளைப் பற்றி கேள்விப்பட்ட இங்கிலாந்திலிருந்த கிறிஸ்து மார்க்க கல்வி அபிவிருத்திச் சங்கம், ஒரு அச்சியந்திரத்தை அவருக்குப் பரிசாக அனுப்பியது. 1713ஆம் ஆண்டு, சீகன்பால்க் தனது புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பை அச்சிடும் பணிகளை ஆரம்பித்தார்.

1714 ஆம் ஆண்டு, சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் வெளியிடப்பட்டன. 1715 இல், புதிய ஏற்பாட்டின் மிகுதிப்பகுதிகள் அச்சிடப்பட்டன. சீகன்பால்க், ஸ்கிமிட் என்பவரின் மூல மொழி வேதாகமத்தையும், ஜெரோமின் லத்தீன் மொழிபெயர்ப்பு, மார்ட்டின் லூத்தர், ஓபன்பார்க் என்போரது ஜெர்மன் மொழிபெயர்ப்புகளையும் உபயோகித்து வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதற்கு முன் வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிராதமையினால், கிறிஸ்தவ மார்க்கக் கருத்துக்களைத் தமிழில் எவ்வாறு எழுதுவது என்பது சீகன் பால்க்கிற்கு பெரும் சிக்கலாயிருந்தது. இவ்விஷயத்தில், ரோமன் கத்தோலிக்க மிஷன் தமிழில் வெளியிட்டிருந்த ஒரு சில புத்தகங்களே சீகன் பால்க்கிற்கு பெரிதும் உதவின. அவர், அக்கால ரோம சபை மிஷனரிகளைப் போலவே கடவுளுக்கு ‘சருவேசுவரன்’ எனும் பதத்தை உபயோகித்தார். தமிழில் முதன் முதலில் வேதாகமத்தை மொழி பெயர்த்த சீகன்பால்க் 1719 இல் மரணமடைந்தார். அச்சமயம், அவர் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் புத்தகம் வரைக்கும் மொழிபெயர்த்திருந்தார். சீகன்பால்க் மரணமடைந்த வருடம் தரங்கம்பாடிக்கு மிஷனரியாக வந்த பெஞ்சமின் சூள்ட்ஸ் என்பவர், 1723 இல் பழைய ஏற்பாட்டின் மிகுதிப்பகுதியைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். 1725இல் பெஞ்சமின் சூள்ட்ஸின் மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. இவரது முயற்சி காரணமாக 1723 இல் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையிலான புத்தகங்களும், 1724 இல் சங்கீதப்புத்தகமும், 1726 இல் ரூத் முதல் உன்னதப்பாட்டு வரையிலான (சங்கீதம் தவிர்த்து) புத்தகங்களும், 1727 இல் ஏனையவையும் அச்சிடப்பட்டன. 40 வருடங்களாக, தமிழ் கிறிஸ்தவர்கள் சீகன்பால்க், சூள்ட்ஸ் என்போர் மொழிபெயர்த்த இவ்வேதாகமத்தையே உபயோகித்து வந்தனர்.

✋ பெப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பு (Johann Phillip Fabricius)

பெப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பு "பொன் மொழிபெயர்ப்பு" (Golden Version) என்று பலராலும் பாராட்டப் பெற்றது. சீகன்பால்க் மொழிபெயர்த்த தமிழ் வேதாகமத்தின் மொழிநடை திருப்திகரமற்றது எனும் கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்தமையினால், அதைத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டியது அவசியம் என அநேகர் கருதினர். இதனால் ஜோஹான் பிலிப் பெப்ரீஷியஸ் என்பவர், சீகன் பால்க்கின் வேதாகமத்தைத் திருத்தி மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெப்ரீஷியஸ், 1740 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலுள்ள கடலூருக்கு மிஷனரியாகப் பணியாற்ற வந்தவராவார். 1742 இல், சென்னைக்குச் சென்ற இவர், மரிக்கும் வரை அங்கிருந்து இறைபணியாற்றினார். இவர் தன் ஊழியகாலத்தில் பலவிதமான பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்ததோடு, வயோதிப காலத்தில் பலதடவைகள் சிறைப்பட்டுமுள்ளார். மேலும், இவருடைய காலத்தில் ஏற்பட்ட பல யுத்தங்கள், பஞ்சம் என்பன இவரை வெகுவாகப் பாதித்தது. இவர் தனது துயர காலத்தில் பல கிறிஸ்தவப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் தயாரித்த 9000 சொற்கள் கொண்ட ஆங்கில – தமிழ் அகராதி பிரபல்யமானதொன்றாகும்.

வேதாகமத்தின் மூலமொழிகளில் பட்டம் பெற்றிருந்த பெப்ரீஷியஸ் இந்தியாவுக்கு வந்து 7 மாதங்களிலேயே தமிழ் மொழியைக் கற்று தமிழில் பிரசங்கிக்கக்கூடியவரானார். பெப்ரீஷியஸ் 1752 இல் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். இவர் முழங்காலிலிருந்து வேதாகமத்தை மொழி பெயர்த்ததாகச் சொல்லப்படுகின்றது. சீகன்பால்க் இரு வருடங்களில் செய்த வேலையை பெப்ரீஷியஸ், இருபது வருடங்களாக மிகுந்த கவனத்துடனும் அதிக நுணுக்கமாகவும் நிதானமாகவும் செய்தார். பெப்ரீஷியஸ் தனது மொழி பெயர்ப்பைப் பலதரப்பட்ட மக்களுக்கும் வாசித்துக் காண்பித்து, அது சகலருக்கும் விளங்குகிறதா என்பதையும், மொழிபெயர்ப்புப் பற்றிய மக்களது கருத்துக்களையும் அறிந்து கொண்டார். இவரது புதிய ஏற்பாடு 1772 இல் தரங்கம்பாடியில் இருந்த கிறிஸ்து மார்க்க அபிவிருத்திச் சங்க அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு வேலைகள் முடிவடைந்தவுடன், பெப்ரீஷியஸ் பழைய ஏற்பாட்டையும் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்ததில் பெப்ரீஷியசுக்குக் கிடைத்த அனுபவம், பழைய ஏற்பாட்டைச் சிறப்பான முறையில் மொழிபெயர்க்க அவருக்கு உதவியது. அத்தோடு பெப்ரீஷியஸ் வேதாகமத்தின் மூலமொழிகளை நன்கறிந்திருந்தமையினால், அவரது மொழிபெயர்ப்பு மூலமொழியோடு இணங்கும் மொழிபெயர்ப்பாய் இருந்தது. அத்தோடு, பெப்ரீஷியசின் தமிழ்மொழிநடை சீகன்பால்க்கினுடையதைவிட சிறப்பானதாக இருந்தது. எனினும், சொற்களைப் பொறுத்தவரை பெப்ரீஷியஸ் சீகன் பால்க்கின் மொழிபெயர்ப்பிலுள்ள பதங்களையே உபயோகித்துள்ளார்.

சீகன்பால்க் கடவுளுக்கு உபயோகித்த சருவேசுவரன் எனும் பதத்திற்குப் பதிலாக பெப்ரீஷியஸ், “பராபரன்” எனும் பதத்தைத் தன்னுடைய மொழிபெயர்ப்பில் உப யோகித்திருந்தார். இது, அக் காலத்தில் பொதுவழக்கில் இருந்த ஒரு பதம் அல்ல. தாயுமானவர் எனும் சைவசமயப் புலவரது பாடல்களிலேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தது.

சீகன்பால்க் கடவுளுக்கு உபயோகித்த சருவேசுவரன் எனும் பதத்திற்குப் பதிலாக பெப்ரீஷியஸ், “பராபரன்” எனும் பதத்தைத் தன்னுடைய மொழிபெயர்ப்பில் உபயோகித்திருந்தார். இது, அக்காலத்தில் பொது வழக்கில் இருந்த ஒரு பதம் அல்ல. தாயுமானவர் எனும் சைவ சமயப் புலவரது பாடல்களிலேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தது.

இவர், பராபரக் கண்ணிகள் என்ற 389 பாடல்களைப் பாடியவராவார். இப்பாடல்களில் இந்துசமயக் கருத்துக்கள் அதிகம் புகுத்தப்படவில்லை. எனினும் இவை பக்திரசம் மிகுந்த பாடல்களாகும். இப்பாடல்கள் ஒவ்வொன்றும் பராபரமே என முற்றுப் பெற்றன. இப்பதம், இந்துமதத் தெய்வமான சிவபெருமானுடன் அதிகமாகச் சேர்த்து உபயோகிக்கப் படாதமையினால், கடவுளைக் குறிக்க பொதுவான பெயராக இருக்கக்கூடியது என தரங்கம்பாடியிலிருந்த ஏர்னஸ்ட் வோல்ட்டர் எனும் மிஷனரி கண்டுகொண்டார். இதனால், தரங்கம்பாடியிலிருந்த மிஷனரிகள் கடவுளைக் குறிக்க பராபரன் எனும் பதத்தையே உபயோகித்தனர்.

மேலும், அக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரியான கான்ஸ்டன்டைன் பெஸ்கி, சீகன்பால்க்கின் வேதாகம மொழிபெயர்ப்பு தரம் குறைவானது என ஏளனம் செய்தமையினால், தங்களை ரோமன் கத்தோலிக்க மிஷனரிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தரங்கம்பாடியிலிருந்த புரட்டஸ்தாந்து சபை மிஷனரிகள், ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் உபயோகித்த சருவேசுவரன் எனும் பதத்தை விடுத்து பராபரன் எனும் பதத்தை உபயோகிக்கத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. பெப்ரீஷியசும் இப்பதத்தையே தனது மொழி பெயர்ப்பில் உபயோகித்திருந்தார்.

பெப்ரீஷியஸ் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு, பகுதி பகுதியாகவே வெளியிடப்பட்டது. 1777 இல், ஆதி யாகமம் முதல் நியாயாதிபதிகள்வரையிலும், 1782 இல், ரூத் முதல் யோபு வரையிலும், 1791 இல் சங்கீதங்கள் முதல் உன்னதப்பாட்டு வரையிலும் அச்சிடப்பட்டன. அவ்வருடம் பெப்ரீஷியஸ் மரணமடைந்தார். பழைய ஏற்பாட்டில் அவர் மொழிபெயர்த்திருந்த தீர்க்கதரிசனப் புத்தகங்கள் 1796ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெப்ரீஷியஸ் தமிழ் மொழிபெயர்ப்பு 1813 இல் வில்லியம் கேரியினாலும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் வெளிவந்துள்ள வேதாகமங்களில் பெப்ரீஷியஸ் மொழி பெயர்ப்பே சிறந்ததாகக் கருதப்படுகின்றது. பிற்காலத்தைய திருத்தப் பதிப்புகளுக்கெல்லாம் இம்மொழி பெயர்ப்பே அடிப்படையாய் அமைந்தது.

பெப்ரீஷியஸ், சீகன்பால்க்கின் மொழிபெயர்ப்பில் காணப்பட்ட குறைகளையெல்லாம் நீக்கி, சிறப்பாக வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். பிற்காலத்தில் இம்மொழிபெயர்ப்பு சில திருத்தங்களுக்குட்பட்ட போதிலும், அதன் உள்ளடக்கம் இன்றுவரை மாற்றமடையாமலேயே உள்ளது. இம்மொழிபெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் என்பதே இதற்கெதிராகக் கொண்டுவரப்பட்ட ஒரே ஒரு குற்றச்சாட்டாகும். இதைத்தவிர, இது பொன்மொழி பெயர்ப்பு என பலராலும் புகழப்பட்டுள்ளது. பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பு இன்று உபயோகத்தில் இல்லாதபோதிலும், இதற்குப் பின்னர் வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் புகுந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பிற்கால மொழி பெயர்ப்புகள் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பின் திருத்தப்பதிப்புகளாகவே இருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்தியாவில் பணியாற்றிய மிஷனரிச் சங்கங்கள் ஒவ்வொன்றும், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பைச் சிறிது திருத்தி மொழிபெயர்த்து உபயோகித்தன.

💊 ரேனியஸ் மொழிபெயர்ப்பு (Charles Theophilus Ewald Rhenius)

1820 ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட வேதாகமச் சங்கம், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பைத் திருத்தி மொழிபெயர்க்கத் தீர்மானித்தது. பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பு வெளிவந்து 50 வருடங்களாகிவிட்டமையினால் அதன் மொழிநடை மாற்றப்பட வேண்டிய தன் அவசியத்தைச் சென்னை வேதாகமச் சங்கம் உணர்ந்தமையே இதற்கான காரணமாகும். மேலும், அக்காலத்தில் தமிழ்நாட்டில் பணியாற்றிய மிஷனரி சங்கங்கள் ஒவ்வொன்றும், தத்தமது விருப்பப்படி பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பைத் திருத்திவந்தமையினால், சகல கிறிஸ்தவர்களும் உபயோகிக்கக் கூடிய தனி ஒரு மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும் என எண்ணிய சென்னை வேதாகமச் சங்கம், அத்தகு ஒரு மொழிபெயர்ப்பைத் தயாரிக்கும் பொறுப்பை சார்லஸ் ரேனியஸ் என்பவரிடம் ஒப்படைத்தது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் ரேனியஸ், 1814ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து அங்கிருந்த சபை மிஷனரி சங்கத்தில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். இவர் தமிழ் மொழியைத் திறம்பட கற்க விரும்பியவராய், திருப்பாற் கடல நாதன் கவிராயர் எனும் கல்வி மானிடம் 14 வருடங்களாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ் மொழியில் சிறப்பான முறையில் பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த ரேனியஸ், பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் முதன் முதலில் பூமிசாஸ்திரப் பாடப்புத்தகம் இவராலேயே எழுதப்பட்டது. இவர் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

தமிழ்மொழியில் சிறப்பான முறையில் பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த ரேனியஸ், பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் முதன் முதலில் பூமி சாஸ்திரப் பாடப்புத்தகம் இவராலேயே எழுதப்பட்டது. இவர் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும், வசனத்தமிழை முதன் முதலாகச் சந்தி பிரித்து எளிமையாக்கியவரும் இவரேயாவார். சுவிசேஷம் அறிவிப்பதிலும், பாடசாலைகளையும் சபைகளையும் ஸ்தாபிக்கும் முயற்சியிலும் இவரது பணி மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் திருநெல்வேலியில் 300 சபைகளை ஸ்தாபித்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பின் மொழி நடையைத் திருத்தினார். இவரால் திருத்தப்பட்ட சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் 1827இலும், புதிய ஏற்பாடு முழுவதும் 1833இலும் வெளியிடப்பட்டது. 1840இல் இவரது புதிய ஏற்பாடும் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாடும் ஒன்றாக வெளியிடப்பட்டது.

பெப்ரீஷியசைப் போலவே ரேனியசும் கடவுளுக்குப் பராபரன் எனும் பதத்தை உபயோகித்துள்ள போதிலும், அவர் சில இடங்களில், ‘தேவன்’ எனும் பதத்தையும் குறிப்பிட்டுள்ளார். பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பிலிருந்த சில இலக்கணப் பிழைகளையும் ரேனியஸ் திருத்தியுள்ளார். குறிப்பாக, அஃறிணைப் பன்மை எழுவாய்க்கு, ஒருமைப் பயனிலையே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் உபயோகிக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், சாதாரண பேச்சு வழக்கில் இவ்விதம் பன்மை எழுவாய், ஒருமைப் பயனிலையுடன் உபயோகிக்கப்பட்டமையேயாகும். உதாரணமாக, விதைப்பவனுடைய உவமையில் விதைகள் விழுந்தது, பறவைகள் பட்சித்தது, அவை முளைத்தது, என்றே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டிருந்தது. ரேனியஸ் இவ்வாக்கியத்தை இலக்கண முறைப்படி, விதைகள் விழுந்தன, பறவைகள் பட்சித்தன, அவை முளைத்தன என திருத்தினார். பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பில் இதைப்போன்ற பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பிலிருந்த சில வார்த்தைகளையும் ரேனியஸ் மாற்றியுள்ளார். உதாரணமாக, இந்த லோகம் என்பதை ‘இவ்வுலகம்’ என்றும், வெளிச்சம் என்பதை ‘ஒளி’ என்றும், வானராச்சியம் என்பதை ‘பரலோக ராச்சியம்’ என்றும், பாஷா என்பதை ‘பஸ்கா’ என்றும், சிநேகம் என்பதை ‘அன்பு’ என்றும் ரேனியஸ் மாற்றினார்.

மேலும் 1 கொரிந்தியர் 13 இல் ஓசை தரும் கிண்கிணி என்றிருந்ததை ஓசையிடுகிற கைத்தாளம் என்றும், அப்போஸ்தலர் 1:3 இல் உயிரோடிருக்கிறவராகப் பிரசன்னப்படுத்தினார் என்பதை, உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார் என்றும், 2 தீமோத்தேயு 4:7 இல், விசுவாசத்தைக் கைக்கொண்டேன் என்றிருந்ததை விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்றும், எபிரேயர் 12:1 இல், சாட்சிகளின் இத்தனை பெரிய மேகம் என்றிருந்ததை மேகம் போல் இத்தனை திரளான சாட்சிகள் என்றும் திருத்தினார். இதிலிருந்து ரேனியசின் திருத்தங்கள் எத்தகையவை என்பதை அறியக்கூடியதாயுள்ளது.

இதைப்போன்று, பெப்ரீஷியசின் மொழி நடையில் ரேனியஸ் பல திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையிலான புத்தகங்களையும், சங்கீதங்கள், ஏசாயா, தானியேல் எனும் புத்தகங்களையும் திருத்தியுள்ளார். ரேனியஸ் மொழி பெயர்ப்பு இலக்கணத்தில் ஆர்வமிக்கவர்களாய் இருந்தவர்களினாலேயே பாராட்டப்பட்டது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவருடைய மொழி பெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

🍀 பேர்சிவெல் மொழிபெயர்ப்பு (Peter Percival)

ரேனியசினுடைய மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர், சில சபைகள் அம்மொழிபெயர்ப்பின் வசனநடை சிறந்ததெனக் கருதி அதை உபயோகிக்கத் தொடங்கினாலும் பெரும்பாலான சபைகள், அது மூலமொழியை விட்டு விலகிச் சென்றுள்ளது எனக் கூறி அம்மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அச்சபைகள், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பையே தொடர்ந்தும் உபயோகித்து வந்த போதிலும், அதன் வசனநடை அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இவ்விரு மொழி பெயர்ப்புகளிலும் உள்ள குறைகள் நீக்கப்பட்டதாகவும், அதேசமயம் இரண்டினதும் சிறப்பம்சங்கள் ஒருங்கே காணப்படுவதுமான ஒரு புதிய மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் அனைத்து சபையினராலும் உணரப்பட்டது. அச் சமயம், இத்தகைய ஒரு மொழி பெயர்ப்பைத் தாம் செய்து தருவதாக வட இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிகள் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவித்தனர். இதனால் யாழ்ப்பாணத்தில் வேதாகம மொழி பெயர்ப்புப் பணிகளைச் செய்வதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டது. பீட்டர் பேர்சிவெல் எனும் மிஷனரி இக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பீட்டர் பேர்சிவெல் மெதடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவராவார். 1826இல் யாழ்ப்பாணத்துக்கு வந்த இவர் தயாரித்த ஆங்கில தமிழ் அகராதி மிகவும் பிரபல்யமானது. யாழ்ப்பாண மொழிபெயர்ப்புக் குபவில் மெதடிஸ்ட் மற்றும் அமெரிக்கன் மிஷன்களைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகித்தனர். இவர்களுக்கு வேதாகம மொழிபெயர்ப்பில் உதவி செய்தவர் தமிழ்ப்புலவர் ஆறுமுக நாவலராவார். உண்மையில், பேர்சிவெல் மொழிபெயர்ப்பின் தமிழ் நடை ஆறுமுக நாவலருடையதாகவே இருந்தது. இம்மொழிபெயர்ப்பின் வேலைகள் 1846 இல் ஆரம்பமானது.

யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் தமது மொழிபெயர்ப்பின் பிரதிகளை சென்னைக்கு அனுப்பியபோது, அது மூலமொழியின் சரியான மொழி பெயர்ப்பு அல்ல என்றும், யாழ்ப்பாணத் தமிழ் இந்தியாவுக்கு ஒத்து வராது என்றும் சென்னை வேதாகமச் சங்கம் தெரிவித்தது. எனினும், இக் குற்றச்சாட்டுகளை யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆறுமுக நாவலருடைய தமிழ்நடை உயர்வானதாக இருப்பதினாலேயே சென்னை வேதாகமச் சங்கம் இவ்வாறு கூறுவதாக அவர்கள் வாதிட்டனர்.

1848 இல் யாழ்ப்பாண வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. இம்மொழிபெயர்ப்பிலேயே கடவுளுக்குத் ‘தேவன்’ எனும் பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேனியஸ் இப்பதத்தை ஒரு சில இடங்களில் பயன்படுத்தியிருந்தபோதிலும், அவர் பராபரன் எனக் குறிப்பிட்டிருந்த இடங்களிலெல்லாம் பேர்சிவெல் குழுவினர் தேவன் எனும் பதத்தை உபயோகித்தனர். தேவன் எனும் பதம் அக்காலத்தில் பன்மையில் இந்து சமயத்தில் உள்ள தெய்வங்களைக் குறிக்கும் பதமாயிருந்தது. ஒருமையில், அத்தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வத்தைக் குறிக்கும். எனினும், இந்து சமயத்தில் முழுமுதற் கடவுள்களான பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் தெய்வங்களுக்குத் தேவன் எனும் பதம் அக்காலத்தில் உபயோகிக்கப்படவேயில்லை. முழு முதற்கடவுள்களுக்குக் கீழானவர்களாயுள்ள தேவர்களே தேவன் என அழைக்கப்பட்டனர். இதனால், கிறிஸ்தவ கடவுளை இப்பதத்தால் அழைப்பது முறையல்ல என்று கருதப்படுகின்றது. ஆறுமுக நாவலரே தந்திரமாக இச்சொல்லை வேதாகமத்தில் புகுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு சிறப்பான மொழிநடையில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த போதிலும், தென்னிந்தியாவிலிருந்த மிஷனரிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதில் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்றும், அது தனி ஒரு மனிதனுடைய மொழி பெயர்ப்புப்போலத் தென்படுகிறது என்றும் குற்றஞ் சாட்டினர்.

இம்மொழி பெயர்ப்பு, சாதாரண பாமர மக்களால் விளங்கிக் கொள்ளப்பட முடியாத மொழிநடையில் உள்ள தென்றும் கருதப்பட்டது. இதனால் சென்னை வேதாகமச் சங்கம் இம்மொழிபெயர்ப்பை நிராகரித்துவிட்டது.

தமிழ் மொழியில் சிறப்பான முறையில் பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த ரேனியஸ், பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் முதன் முதலில் பூமி சாஸ்திரப் பாடப்புத்தகம் இவராலேயே எழுதப்பட்டது. இவர் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும், வசனத்தமிழை முதன் முதலாகச் சந்தி பிரித்து எளிமையாக்கியவரும் இவரேயாவார். சுவிசேஷம் அறிவிப்பதிலும், பாடசாலைகளையும் சபைகளையும் ஸ்தாபிக்கும் முயற்சியிலும் இவரது பணி மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் திருநெல்வேலியில் 300 சபைகளை ஸ்தா பித்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பின் மொழி நடையைத் திருத்தினார். இவரால் திருத்தப்பட்ட சுவிசேஷங்களும் அப்போஸ் தலர் நடபடிகளும் 1827இலும், புதிய ஏற்பாடு முழுவதும் 1833இலும் வெளியிடப்பட்டது. 1840இல் இவரது புதிய ஏற்பாடும் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாடும் ஒன்றாக வெளியிடப்பட்டது.

பெப்ரீஷியசைப் போலவே ரேனியசும் கடவுளுக்குப் பராபரன் எனும் பதத்தை உபயோகித்துள்ள போதிலும், அவர் சில இடங்களில், ‘தேவன்’ எனும் பதத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பிலிருந்த சில இலக்கணப் பிழைகளையும் ரேனியஸ் திருத்தியுள்ளார். குறிப்பாக, அஃறிணைப் பன்மை எழுவாய்க்கு, ஒருமைப் பயனிலையே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் உபயோகிக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், சாதாரண பேச்சு வழக்கில் இவ்விதம் பன்மை எழுவாய், ஒருமைப் பயனிலையுடன் உபயோகிக்கப் பட்டமையேயாகும். உதாரணமாக, விதைப்பவனுடைய உவமையில் விதைகள் விழுந்தது, பறவைகள் பட்சித்தது, அவை முளைத்தது, என்றே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டிருந்தது. ரேனியஸ் இவ்வாக்கியத்தை இலக்கணமுறைப்படி, விதைகள் விழுந்தன, பறவைகள் பட்சித்தன, அவை முளைத்தன என திருத்தினார். பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் இதைப்போன்ற பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பிலிருந்த சில வார்த்தைகளையும் ரேனியஸ் மாற்றியுள்ளார். உதாரணமாக, இந்த லோகம் என்பதை இவ்வுலகம் என்றும், வெளிச்சம் என்பதை ஒளி என்றும், வானராச்சியம் என்பதை பரலோகராச்சியம் என்றும், பாஷா என்பதை பஸ்கா என்றும், சிநேகம் என்பதை அன்பு என்றும் ரேனியஸ் மாற்றினார். மேலும் 1கொரிந்தியர்13 இல் ஓசைதரும் கிண்கிணி என்றிருந்ததை ஓசையிடுகிற கைத்தாளம் என்றும், அப்போஸ்தலர் 1:3இல் உயிரோடிருக்கிறவராகப் பிரசன்னப்படுத்தினார் என்பதை, உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார் என்றும், 2தீமோத்தேயு 4:7இல், விசுவாசத்தைக் கைக்கொண்டேன் என்றிருந்ததை விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்றும், எபிரேயர் 12:1 இல், சாட்சிகளின் இத்தனை பெரிய மேகம் என்றிருந்ததை மேகம் போல் இத்தனை திரளான சாட்சிகள் என்றும் திருத்தினார். இதிலிருந்து ரேனியசின் திருத்தங்கள் எத்தகையவை என்பதை அறியக்கூடியதாயுள்ளது.

இதைப்போன்று, பெப்ரீஷியசின் மொழி நடையில் ரேனியஸ் பல திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையிலான புத்தகங்களையும், சங்கீதங்கள், ஏசாயா, தானியேல் எனும் புத்தகங்களையும் திருத்தியுள்ளார். ரேனியஸ் மொழிபெயர்ப்பு இலக்கணத்தில் ஆர்வமிக்கவர்களாய் இருந்தவர்களினாலேயே பாராட்டப்பட்டது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவருடைய மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

💨 ஹென்றி பவர் மொழிபெயர்ப்பு (Henry Bower)

யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப் படாதமையினால், சகல சபைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமான ஒரு புதிய மொழிபெயர்ப்பைத் தயாரிக்க வேண்டுமென சென்னை வேதாகமச் சங்கம் 1853 இல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அக்காலத்தில், அதுவரை காலமும் மொழிபெயர்க்கப்பட்டிருந்த 4 மொழிபெயர்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்தன. ஒவ்வொரு மிஷன் சங்கமும் தமக்கு விருப்பமான மொழிபெயர்ப்பை உபயோகித்து வந்தது. அந்நிலை மாறி, அனைவரும் ஒரு மொழிபெயர்ப்பை உபயோகிக்க வேண்டும் என்பதே வேதாகமச் சங்கத்தினது தீர்மானத்திற்கான காரணமாயிருந்தது.

இதனால், 1857இல், ஹென்றி பவர் என்பவருடைய தலைமையில் ஒரு புதிய வேதாகம மொழிபெயர்ப்புக் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில், தமிழ்நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றும் அனைத்து மிஷனரி சங்கங்களினது பிரதிநிதிகளும் இருக்க வேண்டும் என கூறப்பட்டபோதிலும், தமது மொழிபெயர்ப்பு நிராகரிக்கப் பட்டமையினால், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மிஷனரிகள் இம்மொழி பெயர்ப்புக்குழுவில் இருக்கவிரும்பவில்லை.

புதிய வேதாகம மொழிபெயர்ப்புக் குழுவுக்குத் தலைவராக இருந்த ஹென்றி பவர் என்பவர், 1833ஆம் ஆண்டிலிருந்து லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பில் இந்தியாவில் பணியாற்றியவராவார். இவர், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்துஸ்தானி எனும் மொழிகளை அறிந்திருந்தார். இவர் தமிழில் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் 1858ஆம் ஆண்டு வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார். இவரது மொழி பெயர்ப்புக் குழுவில் இருந்தவர்கள், மூலமொழி வேதாகமங்களையும், ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த வேதாகமங்களையும் ஆராய்ந்து பார்த்து ஒரு புதிய மொழி பெயர்ப்பைத் தயாரித்தனர். இதன் பிரதிகள் பலரிடம் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டு, அவர்களது விமர்சனங்களைக் கருத்திற்கொண்டு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டபோதிலும், இம்மொழிபெயர்ப்பு 1611ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வெளிவந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமத்தையே அடிப்படையாய்க் கொண்டிருந்தது.

ஹென்றி பவரின் குழுவினரது மொழி பெயர்ப்புப்பணிகளின் காரணமாக 1863 இல் புதிய ஏற்பாடும் 1868 இல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. ஆரம்பத்தில், யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் இப்புதிய மொழிபெயர்ப்பை ஏற்கவில்லை. அதேசமயம் அவர்கள், தமது மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறவில்லை.

ஹென்றி பவரின் குழுவினரது மொழிபெயர்ப்புப் பணிகளின் காரணமாக 1863-ல் புதிய ஏற்பாடும் 1868-ல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. ஆரம்பத்தில், யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் இப்புதிய மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் அவர்கள், தமது மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறவில்லை.

மாறாக, புதிய மொழிபெயர்ப்பு இன்னும் திருத்தப்படவேண்டும் என்று தெரிவித்ததோடு, அதற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டினர். அதேசமயம், புதிய மொழிபெயர்ப்பு மூலமொழியைத் தழுவியதாயிருக்கையில் தமது மொழிபெயர்ப்பு தமிழ் நடையில் சிறந்ததாயிருக்கின்றமையினால், இவ்விரண்டையும் ஒருங்கே கொண்ட ஒரு மொழிபெயர்ப்பைத் தயாரிக்க யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் தீர்மானித்தனர். எனினும், அச்சமயம் இன்னுமொரு புதிய மொழிபெயர்ப்பைச் செய்ய சென்னை வேதாகமச் சங்கம் விரும்பாததினால், யாழ்ப்பாண மிஷனெரிகளின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பைத் திருத்த தீர்மானித்தது. மூலமொழியில் உள்ள ஒரு வார்த்தையைப் பலவாறு தமிழில் எழுதக்கூடிய தாயிருப்பினும் அழகிய சொற்களை உபயோகிப்பதே நல்லது என யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் கூறினர்.

1869-ல் இரு நாட்டினது மிஷனரிகளும் ஹென்றி பவரின் வீட்டில் கூடி அவரது மொழிபெயர்ப்பைத் திருத்தினர். மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும் 468 திருத்தங்கள் செய்யப்பட்டன. இதுபோல ஏனைய புத்தகங்களிலும் அநேக திருத்தங்கள் செய்யப்பட்டன. அதுவரை காலமும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பையே உபயோகித்து வந்தமையினால், ஹென்றி பவரின் திருத்தப் பதிப்பு பெப்ரீஷியசினுடைய மொழி நடையையே பின்பற்றியது. எனினும், தேவை ஏற்படும்போது ரேனியஸ் மற்றும் பேர்சிவெல் என்போருடைய மொழிபெயர்ப்புகளில் இருந்தும் சொற்கள் எடுக்கப்பட்டன.

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட வேதாகமம் 1871-ல் சென்னையில் அச்சிடப்பட்டது. லூத்தரன் சபையைத் தவிர மற்ற அனைத்து சபைகளையும் சேர்ந்தவர்கள் இத்திருத்த மொழி பெயர்ப்புக் குழுவில் இருந்தமையினால், திருத்த மொழிபெயர்ப்பு, ஐக்கியப் பதிப்பு அல்லது ஒன்றிணைப்புப் பதிப்பு என அழைக்கப்படுகின்றது. லூத்தரன் சபையினர் மட்டும், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பை தொடர்ந்து உபயோகித்து வந்தனர்.

ஹென்றி பவரின் தலைமையின் கீழ் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனெரிகளின் ஆலோசனையின்படி திருத்தப்பட்ட ஐக்கியப் பதிப்பு வேதாகமமே இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் உபயோகிக்கும் வேதாகமமாகும். வேதாகமம் முதன்முதலில் 1714-ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. எனினும், நாம் இன்று 1871-ல் வெளி வந்த திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே உபயோகிப்பது அநேக கிறிஸ்தவர்கள் அறியாத ஒரு உண்மையாகும். பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தாம் உபயோகிக்கும் வேதாகமமே முதன் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதென்றும், இதை எவ்வகையிலும் திருத்த முயல்வது தேவனுடைய வார்த்தையை மாற்றுவது எனும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். ஆயினும், நாம் உபயோகிக்கும் வேதாகமம் பல தடவைகள் திருப்பி மொழி பெயர்க்கப்பட்டும் திருத்தப்பட்டும் இருப்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பிலும், அதைத் திருத்தும் பணியிலும் எல்லா மிஷனரி சங்கங்களையும் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தமையினால், திருத்த மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர் எல்லோரும் அதையே உபயோகிக்கத் தொடங்கினர். மேலும் வேதாகம மொழிபெயர்ப்பு பற்றி அக்காலத்தில் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களை இம்மொழி பெயர்ப்பு திருப்திப்படுத்துவதாய் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இம்மொழி பெயர்ப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ஹென்றி பவர், தமது மொழி பெயர்ப்பு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மொழி பெயர்ப்பாக இருப்பதற்காக, மொழி பெயர்ப்பு பற்றி எவர் எதைச்சொன்னாலும் அதையெல்லாம் கவனித்துக் கேட்டு எல்லோரிடமும் ஆலோசனைகளைப் பெற்று வேதாகமத்தை மொழி பெயர்த்துள்ளார்.

இதனால்தான், முதலில் தான் மொழிபெயர்த்த வேதாகமத்தைத் திருத்தவேண்டும் என யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் கூறியபோது, அவர்களது ஆலோசனையின்படி தனது மொழிபெயர்ப்பைத் திருத்தினார். இம்மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர் வேதாகமச் சங்கம் வேறு எந்த ஒரு மொழிபெயர்ப்பையும் அச்சிடாததினால், நாளடைவில் இதுமட்டுமே தமிழ் மொழியில் இருக்கும் வேதாகமம் எனும் கருத்து தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.

🗜 புதிய மொழிபெயர்ப்பு

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்து 50 வருடங்களாவதற்குள் அதை மறுபடியும் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்படத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டுவந்த வேதப்பிரதிகளைவிட பழைமையானதும் நம்பகமானதுமான இரு வேதப்பிரதிகள் கண்டுபடிக்கப்பட்டமையேயாகும். கி.பி.4ஆம் நூற்றாண்டில் வல்கேட் என அழைக்கப்படும் ஜெரோமின் லத்தீன் மொழிபெயர்ப்பு வேதாகமம் வெளிவந்தபின், அதையே ரோம சபை உபயோகித்து வந்தது. கி.பி. 1453இல் கான்ஸ்டன்டிநோபிள் எனும் நகரைத் துரக்கியர்கள் கைப்பற்றியபோது, கிரேக்க மொழியை அறிந்திருந்த பல பண்டிதர்கள் ஐரோப்பாவில் குடியேறத் தொடங்கினர்.

இதனால் 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப் பாவில் கிரேக்க மொழியறிவு அதிகரித்தபோது, லத்தீன் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்குமுன் உபயோகத்தில் இருந்த பல கிரேக்க புதிய ஏற்பாட்டுப் பிரதிகளையும் மக்கள் உபயோகிக்கத் தொடங்கினர். எனினும், இவற்றில் பல வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் இருந்தமையினால், இரஸ்மஸ் என்பவர், தனக்கு கிடைத்த 20 கிரேக்க வேதப்பிரதிகளை அடிப்படையாய்க் கொண்டு ஒரு புதிய கிரேக்க வேதப்பிரதியைத் தயாரித்தார். இதுவே, அதன்பின் அங்கீகரிக்கப்பட்ட மூலப்பிரதியாக எல்லா மொழி பெயர்ப்பாளர்களினாலும் கருதப்பட்டது. இதிலிருந்தே 250 வருடங்களாக ஆங்கில உலகை ஆக்கிரமித்திருந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பு இவ்வாங்கில மொழிபெயர்ப்பைத் தழுவிய மொழி பெயர்ப்பாகவே இருந்தது.

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்தபின், வேதாகமத்தின் இரு முக்கியமான கிரேக்க மூலப்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று 1859இல் சீனாய் மலையிலுள்ள பரிசுத்த தேவனின் தியான மடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவடியாகும். அதேசமயம் வத்திக்கான் நூலகத்திலிருந்த வேதச்சுவடியும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் பிரதி பண்ணப்பட்டதாகும். இச்சுவடி 15ஆம் நூற்றாண்டிலிருந்தே அறியப்பட்டிருந்தாலும், 1843 இலேயே இதை உபயோகிப்பதற்கு ரோம சபை அனுமதியளித்தது. இவ்விரு வேதச் சுவடிகளையும் ஆராய்ச்சி செய்த பண்டிதர்கள், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டு வந்த அங்கீகரிக்கப்பட்ட வேதப்பிரதியைவிட, இவையிரண்டும் சிறப்பானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதைக் கண்டுகொண்டனர்.

இதன்பின்னர், 16 ஆம் நூற்றாண்டில் இரஸ்மஸ் தயாரித்த மூலப்பிரதியை ஆராய்ச்சியாளர்கள் நம்பகமானதாகக் கருதவில்லை. இதிலிருந்து, அதுவரை காலமும் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் எல்லாம் பிழையானவை என நாம் எண்ணலாகாது. கிரேக்க மொழி கையெழுத்துப் பிரதிகளில் சில வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் ஏற்பட்டிருந்தன. இது பிரதிபண்ணியவர்களினால் ஏற்பட்ட தவறாகும். எனவே, கிடைக்கக்கூடிய எல்லா பிரதிகளையும் ஆராய்ந்து பார்த்து எது நம்பகமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும்.

19 ஆம் நூற்றாண்டில், சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதற்கும் முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த கிரேக்க பிரதியை அடிப்படையாய்க்கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் திருத்தப்படவேண்டியது அவசியமாகிறது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட வேதாகமம் வெளிவந்த காலத்தில், 1611 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் ஆங்கில உலகில் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இதனால் அதை அடிப்படையாய்க்கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் வேதாகமம் திருத்தப் பட வேண்டும் எனும் கருத்து உருவானது.

ஹென்றி பவரின் மொழிபெயர்ப்பில் சில பிழைகள் இருப்பதனால் அது திருத்தப்படவேண்டும் என சென்னைக் கிறிஸ்தவப் பிரதிநிதிச் சங்கம் 1915இல் தெரிவித்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட கிரேக்க வேதப் பிரதியை 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த வேதப்பண்டிதர்கள், அதைவிட சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பதை அறியத்தந்தமையினால், தற்சமயம் பல கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ந்த நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டதாக தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. அத்தோடு, வேதாகமத்தில் பவுல் போன்றவர்களை அவன் என்று மரியாதைக் குறைவாக அழைக்கக்கூடாது என்றும் இச்சங்கம் தெரிவித்தது. இக்கருத்துக்கள் அனைத்தும் இச்சங்கத்தினால் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

கிறிஸ்தவப் பிரதிநிதிச்சங்கத்தின் கருத்துக்களை ஆராய்ந்த சென்னை வேதாகமச் சங்கம், லூத்தரன் சபை ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளாதமையினால், அவர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேதாகமத்தைத் திருத்த வேண்டுமென 1917இல் தீர்மானித்து அதற்கென ஒரு குழுவை நியமித்தது. 1920இல், புதிய ஏற்பாட்டில் திருத்தப்படவேண்டிய பகுதிகள் எவை என்பதை இக்குழு வேதாகமச்சங்கத்திற்கு எடுத்துக்காட்டியது. எல்.பி.லார்சன் என்பவர் இக்குழுவுக்குத் தலைவராக இருந்தார். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இவர், 1889ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்துவந்தார். 1910இல் பெங்களூரில் புதிதாக ஒரு இறையியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது லார்சன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் மொழியில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்த இவர், 1924இல் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார். 1925ஆம் ஆண்டு மத்தேயு சுவிசேஷமும் பின்னர் மாற்கு, யோவான் சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் வெளியிடப்பட்டன. திருத்தப்பட்ட இப்பதிப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மொழிபெயர்ப்பில் தேவன் என்பதற்குப் பதிலாகக் கடவுள் எனும் வார்த்தையை லார்சன் உபயோகித்திருந்தார். லூத்தரன் சபை தேவன் எனும் பதத்தை விரும்பாதமையினால் கடவுள் எனும் பதம் அவர்களைத் திருப்திப்படுத்தும் என வேதாகமச் சங்கம் எண்ணியது. அதேசமயம், தேவன் என்ற சொல் மூலப்பதத்தின் சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. 1927ஆம் ஆண்டு, லார்சன் குழுவினரால் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது.

1927-ம் ஆண்டு, லார்சன் குழுவினரால் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. லார்சனின் மொழிபெயர்ப்பு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம், இம்மொழிபெயர்ப்புக்கெதிராக மாதா மாதம் நல்ல சமாரியன் எனும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளேயாகும். இக்கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்ட நியாயங்களைத் தொகுத்து, “புதிய தமிழ் மொழி பெயர்ப்பு அச்சிடாமலும் அதை உபயோகிக்காமலும் விடுவதற்கு ஒரு மனு” எனும் தலைப்பில் ஒரு ஆங்கில நூல் 1939-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில், லார்சன் குழுவினர் வேதாகமத்தின் பல வசனங்களை மாற்றியுள்ளனர்; அதில் பல வசனங்கள் விடப்பட்டுள்ளதோடு பல புதிய வசனங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்றும், மொழிபெயர்ப்புக் குழுவில் கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலித்த ஒருவர் இருக்கிறார் என்றும், இது 1611-ல் வெளிவந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமத்தைத் தழுவி மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், புதிய மொழிபெயர்ப்பில் இந்தியாவில் உபயோகிக்கப்படாத யாழ்ப்பாணத் தமிழ் கலந்திருக்கிறது என்றும், அம் மொழி பெயர்ப்புக்கு அடிப்படையாய் இருந்த சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகள் ஆதாரமற்றவை என்றும் சொல்லப்பட்டிருந்தது. மக்கள், லார்சன் மொழிபெயர்ப்பை வாசித்திராதபடியால், நல்ல சமாரியன் சுட்டிக்காட்டியவை உண்மை என நம்பினர். எனினும், லார்சன் மொழிபெயர்ப்பில் வாக்கிய அமைப்புகளே மாற்றப்பட்டிருக்கின்றன. அவை, வசனத்தின் கருத்தை மாற்றவில்லை என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.

லார்சன் குழுவினரது மொழி பெயர்ப்பில் யாழ்ப்பாணத் தமிழ் உள்ளது எனும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பு, யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனெரிகளின் ஆலோசனைப்படி திருத்தப்பட்டபோதே யாழ்ப்பாணத் தமிழ், வேதாகமத்தில் புகுந்தது. ஆனால், லார்சன் மொழிபெயர்ப்பில் யாழ்ப்பாணத் தமிழ் புகுவதற்கு இடமிருக்கவில்லை. அவரது மொழிபெயர்ப்பு தமக்குப் பழக்கமற்ற நல்ல தமிழ் நடையாய் இருந்தமையே, அது யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்லப்பட்டதற்கான காரணமாகும். கிறிஸ்தவர்கள், தாம் அதுவரை காலமும் உபயோகித்து வந்த மொழிபெயர்ப்பில் பழக்கப்பட்டுவிட்டதால், அதைவிட சிறந்த தமிழை இவ்வாறு குறை கூறினர். மொழிநடை திருத்தப்படும்போது, வசனத்தின் கருத்து மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே நாம் ஒரு மொழிபெயர்ப்பை நிராகரிக்கவேண்டும். லார்சனின் மொழிபெயர்ப்பு வேதவசனங்களின் கருத்தை மாற்றவில்லை. அப்படியிருந்தும், வேதத்தை மாற்றிவிட்டார்கள் எனும் பிரச்சாரம் அம்மொழிபெயர்ப்பைப் பிரபல்யமற்றதாக்கிவிட்டது. 1936-ம் ஆண்டு, லார்சன் குழுவினர் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுடன் சேர்த்து முழுவேதாகமமாக வெளியிடப்பட்டது.

லார்சன் குழுவினரது மொழி பெயர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளாதமைக்கு இன்னுமொரு காரணம், மக்கள் ஹென்றிபவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பில் பழகிப்போனமையேயாகும். லூத்தரன் சபையைத் தவிர மற்ற அனைத்து சபையினரும் இம் மொழி பெயர்ப்பையே உபயோகித்து வந்தமையினால், அதுவே மக்கள் அறிந்திருந்த ஒரே ஒரு மொழிபெயர்ப்பாயிருந்தது. நாளடைவில், வேதாகமம் அதற்கும் முன்பே மொழிபெயர்க்கப்பட்டுத் திருத்தப்பட்டது என்பதை மக்கள் மறந்துபோயினர். தாம் உபயோகித்த வேதாகமத்தின் வசனங்களையே கிறிஸ்தவர்கள் மனனம் செய்து வந்தமையினால், அதன் மொழிநடையை மாற்ற எவரும் விரும்பவில்லை. ஹென்றி பவர் வேதாகமத்தை மொழிபெயர்த்தபோது, அதுவரைகாலமும் மக்கள் உபயோகித்து வந்த மொழிபெயர்ப்பின் வசனநடை மக்களை எவ்வாறு கவர்ந்துள்ளது என்பதை அறிந்து, வேதாகம மொழிநடை திருத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர்ந்திடாத வண்ணம் புதிய மொழிபெயர்ப்பை செய்தமையினால், எல்லோரும் அவருடைய புதிய மொழி பெயர்ப்பை ஏற்றுக்கொண்டனர். லார்சன் குழுவினர் இதைக் கருத்திற்கொள்ளாதமையினால் அவர்களது மொழிபெயர்ப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

லார்சன் மொழிபெயர்ப்பு நிராகரிக்கப் பட்டதன்பின் அதை மறுபடியுமாகத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் எனும் எண்ணம் உருவாகத் தொடங்கியது. நல்ல சமாரியன் குழுவினர், ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பையே தொடர்ந்தும் உபயோகிக்க வேண்டும் எனக்கூறி வந்தனர். எனினும் அம்மொழிபெயர்ப்பு, 16-ம் நூற்றாண்டில் அங்கீகரிக்கப்பட்ட கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தமையினால் திருப்திகரமான மொழிபெயர்ப்பு அல்ல என்பதே வேத பண்டிதர்களின் கருத்தாயிருந்தது. லார்சன் மொழிபெயர்ப்பு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதிருப்பினும் அது, மிகவும் நம்பகமான சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளை ஆதாரமாய்க் கொண்டிருந்தமையினால், அதுவே மூலமொழிக்கு ஏற்றமொழிபெயர்ப்பு என்பதை மூலமொழியை அறிந்திருந்த அனைவரும் நன்கறிந்திருந்தனர். எனவே, நம்பகமான பிரதிகளை அடிப்படையாய்க்கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தை ஏற்றுக்கொள்ளாமல், ஆதாரக் குறைவான மூலப்பிரதியை அடிப்படையாய்க் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தை உபயோகிப்பது நல்லதல்ல என பலர் கருதத் தொடங்கினர். ஆனால், லார்சன் குழுவினரது மொழிபெயர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளாதமையினால், அதை, மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டுமென்று 1939-ல் சென்னை வேதாகமச் சங்கம் தீர்மானித்தது.

லார்சன் மொழிபெயர்ப்பு ஹென்றி பவரின் மொழிநடையில் திருத்தப்பட வேண்டும் என வேதாகமச் சங்கம் கூறியது. ஹென்றி பவரும் இதேவிதமாகவே தனது மொழிபெயர்ப்பைத் திருத்தியிருந்தார். அவருடைய காலத்தில் மக்கள் பெப்ரீஷியசின் மொழிநடையில் பழகிப்போயிருந்தமையினால், ஹென்றிபவர் அம்மொழிநடையை மாற்றவில்லை. புதிய திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பை மக்கள் வாசித்தபோது, தாம் பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பையே வாசிக்கின்றோம் எனும் உணர்வு ஏற்படும் வண்ணம் ஹென்றிபவரின் மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. இதனாலேயே, லார்சன் மொழி பெயர்ப்பு ஹென்றிபவரின் மொழி நடையில் திருத்தப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, லார்சன் மொழிபெயர்ப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெகோவா எனும் பதத்தை, பழைய மொழிபெயர்ப்பிலுள்ளது போன்று கர்த்தர் என்றே மாற்றவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. புதிய மொழி பெயர்ப்புக் குழுவுக்குப் பொறுப்பாக சி.எச்.மோனஹன் என்பவர் நியமிக்கப்பட்டார். அயர்லாந்தைச் சேர்ந்த இவர் 1893 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிஷனரியாக வந்தவராவார். தான் அதுவரைகாலமும் பணியாற்றிய மிஷனிலிருந்து 1940 இல் ஓய்வு பெற்றபோது, இவர் வேதாகம மொழி பெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார்.

மோனஹன் குழுவினரது மொழி பெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப்பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மோனஹன் குழுவினரது மொழிபெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப் பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேசமயம் லார்சன், பெப்ரீஷியஸ் ஹென்றி பவர் என்போருடைய தமிழ் மொழிபெயர்ப்புகளையும், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப்பார்த்து மோனஹன் குழுவினர் தமது பணியைச் செய்தனர். இவர்கள் தமது மொழி பெயர்ப்பு சாதாரண கிராமவாசிக்கும் விளங்கக்கூடிய வண்ணம் இலகுவான மொழியில் இருக்கவேண்டும் என்பதிலும், கிறிஸ்தவர்கள் அதுவரை காலமும் உபயோகித்துப் பழகிய வார்த்தைகளை மாற்றக்கூடாது என்பதிலும் அதிக அக்கறையுடையவர்களாக இருந்தனர்.

அதேசமயம், முழுமுதற் கடவுளுக்குத் தேவன் எனும் பதத்தைவிட கடவுள் என்ற பதமே சரியானது என்பதனால், அதையே மோனஹன் குழுவினர் உபயோகித்தனர். மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அதற்கெதிராகச் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதனால், இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் இக்குழுவினர் இருந்தனர். புதிய மொழிபெயர்ப்புக்கெதிராகச் சொல்லப்பட்ட கருத்துக்களும், அதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் அளித்த பதில்களும் இந்தியக் கிறிஸ்தவ தேசாபிமானி எனும் பெயர் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையில் வெளியிடப்பட்டன. புதிய மொழிபெயர்ப்பு, 1611ஆம் ஆண்டில் வெளி வந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமம் உபயோகித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிராதமையினால், அது சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதே இம்மொழிபெயர்ப்புக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டாகும். மொழிபெயர்ப்புக் குழுவினர், அக்கிரேக்கப் பிரதியைவிட அதற்கும் முன்பிருந்த கிரேக்கப் பிரதிகளே நம்பகமானவை என்பதைச் சுட்டிக்காட்டி வந்தனர்.

1949 இல், மோனஹன் குழுவினரது பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வெளி வந்தது. 1954 இல் புதிய ஏற்பாடு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. லார்சன் மொழிபெயர்ப்புக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு மோனஹன் மொழிபெயர்ப்புக்கு ஏற்படாத போதிலும், மக்கள் தொடர்ந்தும் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட ஐக்கிய பதிப்பையே உபயோகித்து வந்தனர். மொழிபெயர்ப்புகளுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள் குறைவாகவே இருக்கின்றபோதிலும், மக்கள் தாம் உபயோகித்துப் பழகிய மொழிபெயர்ப்பிலேயே திருப்தியடைந்து விட்டனர். அவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தரும் ஒரு மொழி பெயர்ப்பு அவசியம் என்பதை உணரவில்லை. மோனஹன் குழுவினர் அதிக கவனத்துடன் தமது மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தபோதிலும், அவர்களுடைய வேதாகமத்தில் ஆங்காங்கே சில அச்சுப்பிழைகளும், வேறுவகையான பிழைகளும் இருந்தன. எனவே, அவற்றைத் திருத்துவதற்கு 1961இல் ராஜரீகம் என்பவரது தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடும் சங்கீதங்களும் 1979இல் வெளிவந்தன. இது இலக்கணப் பிழைகள் அற்றதாகவும், எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் சிறிய வசனங்களைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும், வடமொழிச் சொற்கள் நீக்கப்பட்டு தனித் தமிழில் இம்மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதுவும் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆரம்பகால ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் ஒருசில வேதப் பகுதிகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். 1857ஆம் ஆண்டே ரோமன் கத்தோலிக்கச் சபையினரால் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பாண்டிச்சேரியில் வெளிவந்தது. இது, வெளிநாட்டு மிஷன்களுக்கான பாரீஸ் சங்கத்தைச் சேர்ந்த மிஷனரிகளினால் மொழிபெயர்க்கப்பட்டது. 1890இல், இயேசு சங்கத்தைச் சேர்ந்த ஜே.பி.டிரின்சல் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1904ஆம் ஆண்டு பாண்டிச்சேரியிலிருந்த ரோமன் கத்தோலிக்க மிஷன் அச்சகத்தில் பழைய ஏற்பாடு தமிழில் பிரசுரிக்கப்பட்டது. 1960 இல், முழு வேதாகமமும் ஒன்றாக வெளியிடப்பட்டது. 1970 இல், இக்கால மொழி நடைக்கு ஏற்றவிதமாக ரோமன் கத்தோலிக்கச் சபையினர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

1974இல், இந்திய வேதாகமச் சங்கம், ரோம சபையுடன் இணைந்து பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியை ஆரம்பித்தது. 1977இல் இந்திய சுவிசேஷ ஊழிய நூல் நிலையத்தினர் “ஜீவனுள்ள மீட்பின் செய்தி – ஒரு தெளிவுரை” எனும் தலைப்பில் புதிய ஏற்பாட்டின் இலகு மொழிநடையிலான மொழிபெயர்ப்பை வெளியிட்டனர். இது, ஆங்கிலத்தில் வெளிவந்த லிவிங் பைபிள் எனும் வேதாகமத்தின் தமிழாக்கமாகும். இம்மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழர்க்கு ஏற்றதல்ல எனக்கருதிய இலங்கையிலுள்ள லிவிங் பைபிள் ஸ்தாபனத்தினர் லிவிங் பைபிளை மறுபடியுமாக மொழிபெயர்த்து 1981இல் ‘வாழும் இறைவாக்கு’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இக்காலத் தமிழ் நடையில் வேதாகமம் இருந்தாலேயே மக்களால் தேவனுடைய வார்த்தையை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும் எனும் எண்ணத்தில் புதிய மொழி பெயர்ப்புகள் வெளிவந்தாலும், பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே இன்றுவரை உபயோகித்து வருகின்றனர்.

1.வேதாகமம் தேவனின் வெளிப்பாடாகும்

வேதாகமம் ஏன் இவ்வளவு சிறப்புப் பெற்றிருக்கிறது? தனிச்சிறப்பு வாய்ந்ததாயிருக்கிறது? என்று நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா?

இது அதிகம் விற்பனையாகும் புஸ்தகம் என்பது இதற்குக் காரணம் அல்ல. இது 2000 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் காரணம் அல்ல. இது ஒரு மிகப் பழமையான புத்தகம் என்பதும் காரணம் அல்ல. இது உண்மையானது என்பதாலும் அல்ல. இது பல்வேறு அமைப்புகளிலும் வடிவங்களிலும், பதிப்புகளிலும் வெளியிடப்பட்ட தாலும் அல்ல.

இந்த உலகில் வெளியிடப்பட்டுள்ள எல்லா புத்தகங்களைவிடவும் இது தனிச் சிறப்பும் பெற்றிருப்பதன் காரணம் வேதாகமத்தின் எழுத்தாளர் தேவன் என்பதே! இது அவருடைய புத்தகம்! இதை வாசிப்பதன் மூலம் நாம் கடவுளைப் பற்றியும் அவரோடுள்ள நமது உறவையும் தெரிந்துகொள்ளலாம்.

சத்தம் இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! பேச்சு இல்லை; யென்றால் செவிக்குக் கேட்கும் வேலை இல்லை. எந்தவகையான செய்தி தொடர்பும் இல்லை. எங்கும் ஒரே அமைதிதான்!

ஹெலன் கெல்லருக்குப் பார்வை இல்லை. காதும் கேட்காது, இந்த வகையான அமைதியை அனுபவித்தவர் அவரே. போர்க் கைதிகள் ஏறக்குறைய இதுபோன்ற அமைதியை அனுபவித்திருப்பார்கள். அவர்களால் கேட்க முடியாது என்பதல்ல; கேட்கமுடியும். ஆனால், போர்க் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒருவரோடொருவர் பேசக்கூடாது. இப்படி மற்றவர்களோடு அவர்கள் பேச முடியவில்லை; ஆனால், இவர்கள் அனுபவிப்பது தனிமைச் சிறையே!

இந்தப் பூமியில் இருக்கும் நமக்கு தேவனோடு உறவு கொள்ள முடியாத நிலை இருக்குமானால், அது எவ்வளவு பரிதாபமான நிலை! ஆனால் அவர், நாம் அவரோடு தொடர்பு கொள்ளவும், பேசவும் ஒரு மார்க்கத்தைத் தந்திருக்கிறார். அதுதான் ஜெபம்; அதுபோலவே தேவனும் நம்மோடு தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ! தேவன் மனிதரோடு தொடர்புகொள்ளும் மார்க்கமே வேதாகமம்; வேதாகமத்தின் மூலமாக தேவன் நம்மோடு பேசுகிறார். நம்முடைய உள்ளத்துக்கு தேவன் தமது உள்ளத்தை வேதாகமம் மூலம் வெளிப்படுத்துகிறார்.

தேவன் தம்மை வெளிப்படுத்த வேண்டியதின் அவசியம்.

தேவன் தம்மை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தாரானால், நாம் அவர் இருக்கிறார் என்ற ஒன்றைத்தவிர வேறு எதையும் அறிந்திருக்கமாட்டோம். தேவன் இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இந்த ஒழுங்கு எப்படி வந்தது?

  • நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் தம்தம் நிலைகளில் சென்றுகொண்டிருக்கின்றன.
  • கிரகங்கள் ஒவ்வொன்றும் தம்தம் வட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
  • சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவை தவறாமல் நடைபெறுகின்றன.

தேவனே இந்தப் பிரபஞ்சம் முழுவதுக்கும் அதிபதி! அவர் எல்லாவற்றுக்கும் மேலானவராக உயர்ந்திருப்பதால், அவரது படைப்புகள் அவரை நெருங்க முடியாமல் இருக்கிறது. அவர் தம்மை வெளிப்படுத்தினால் மட்டுமே படைப்புகள் அவரை அறியமுடியும்.

“கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர் எல்லாத் தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்” (சங்கீதம் 97:9).

“கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனுக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்” (சங்கீதம் 113:4-6).

தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்த தீர்மானிக்காவிட்டால், அவரது தன்மை, பண்பு, குணாதிசயம் இவற்றை நாம் அறிந்துகொள்ள முடியாது. அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு, கரிசனை, பராமரிப்பு இவற்றைப் புரிந்துகொள்ளவும் முடி யாது.

தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எப்படி?

இறையியலாளர்கள் இரண்டு வகையான வெளிப்பாடுகளைக் கூறுகிறார்கள்.

1. முதலாவது பொதுவான வெளிப்பாடு

இது தேவன் ஒருவர் உண்டு; அவர் நிலைத்திருக்கிறார் என்றுமட்டும் நமக்குக் காட்டும். அவரது தன்மைகள், பண்பு, குணாதிசயம் இவற்றை நமக்கு வெளிப்படுத்துவதில்லை. உதாரணமாக, தேவன் ஒர் அழகான உலகத்தைச் சிருஷ்டித்தார்.

“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்கீதம் 19:1).

“காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?” (யோபு 38:41).

தேவன் நம்மை பராமரிக்கிறவர் என்பதற்கு இதுவே சான்று!

“உன்னதமானவர் மனுஷனுடைய இராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனுக்கு அதைக்கொடுத்து…” (தானியேல் 4:17).

தேவன் மனிதனுடைய ஆளுகையில் தலையிடுகிறார்.

தேவனைப்பற்றி நாம் அறிய விரும்பும் அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்தப் “பொது வெளிப்பாடு” போதாது. தேவனோடுள்ள நமது உறவு அவர் திட்டமிட்டபடி உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள அது போதாது. எனவே தேவன் தம்மை வெளிப்படுத்துவதில் இன்னும் ஒருபடி தாண்டிச் சென்றார்.

2. மிகச் சிறப்பான வெளிப்பாடு

இது மூன்று வகைகளில் நடைபெறுகிறது.

i. ஆரம்ப காலத்தில் தேவன் மக்களோடு நேரடியாகப் பேசினார். சிலவேளைகளில் அது பரலோகத்திலிருந்து வெளிப்படும் சத்தமாயிருந்தது.

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, நீ எங்கே இருக்கிறாய்? என்றார் (ஆதியாகமம் 3:9). சில தடவைகளில் தேவன் மக்களோடு சொப்பனத்தின் மூலமாகப் பேசினார்.

யாக்கோபு தான் கண்ட தரிசனத்தில் வானத்துக்கும் பூமிக்கும் வைக்கப்பட்டிருந்த ஏணியில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களுமாய், இறங்குகிறவர்களுமாய் இருக்கக் கண்டான். அப்பொழுது யாக்கோபு தேவனுடைய சத்தத்தைக் கேட்டான் ( ஆதியாகமம் 28:12-17).

தரிசனஙகளின் மூலம் தேவன் அடிக்கடி மக்களுடன் பேசினார். அப்பொழுது தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். தேவன் தீர்க்க தரிசியைப் பலதடவைகளில் கிரியை செய்யும்படி தூண்ட வேண்டியதாயிற்று (எசேக்.43:3). அப்போதும் கூட இத்தகைய நிகழ்ச்சிகள் சாதாரணமாக நடை பெறவில்லை. புதிய ஏற்பாட்டு காலத்தில் இது மிக மிகக் குறைவு.

ii. இரண்டாவதாக, இயேசு இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, வாழும் வார்த்தையாக இருந்த அவர் தேவனை நமக்கு வெளிப்படுத்தினார்.

அவர் பிதாவாகிய தேவனின் வார்த் தைகளை உலகில் பேசினார். “பூர்வ காலங்களில் பங்குபங்காகவும், வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்” (எபிரெயர் 1:1,2).

தம்முடைய பிதாவாகிய தேவனைக் குறித்து இயேசு கூறும்போது, “என்னை அனுப்பினவர் (தேவன்) சத்தியமுள்ளவர் அவனிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்” என்றார் (யோவான் 8:26).

தேவனுடைய நித்திய தன்மையையும், திட்டத்தையும் வெளிப்படுத்த தேவனுடைய நித்தியகுமாரன் வந்தார். எனினும் உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை. உலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கோ, தேவனுடைய பிள்ளைகளாகும் உரிமை கொடுக்கப்பட்டது.

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).

தேவகுமாரன் இப்போது பரலோகத்தில் தம் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். அப்படியானால் நாம் தேவனைப்பற்றிய எந்த சிறப்பான வெளிப்பாடும் இல்லாமல் விடப்பட்டிருக்கிறோம் என்று பொருளா? அவருடைய அன்பையும், கரிசனையையும் குறித்து நாம் அறிந்துகொள்ள ஒரு இடம் இல்லையா?

தேவன் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார்? என்று அறிய ஒரு மார்க்கமும் இல்லையா? நிச்சயமாக இருக்கிறது! ஜாண்பர்ட்டன் எழுதிய பழைய பாடலைப் பாருங்கள்.

பரிசுத்த வேதம், தெய்வீக புத்தகம் விலையேறப்பெற்ற பொக்கிஷம்!
நீ என்னுடையதே! எங்கிருந்து வந்தேன்? நான் யார்? என்று நீ எனக்குப் போதிக்கிறாய்.
வனாந்தரப் பாடுகளிலும் துன்பத்திலும் எனக்கு ஆறுதல் நீயே!
மனிதன் மரணத்தை வெல்லலாம் என்று ஜீவனுள்ள விசுவாசத்தின் மூலம் காட்டுகிறாய் எனக்கு நீயே!

iii. மூன்றாவதாக, தேவன் தம்மை இன்னொரு சிறந்த வழியின் மூலம் வெளிப்படுத்த விரும்பினார். அது தான் எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தை, வேதவசனம் அடங்கிய பரிசுத்த வேதாகமம் அது ஒரு தெய்வீகபுத்தகம்.

வேறு எல்லாப் புத்தகங்களையும் விட வேதாகமத்தைப் பிரித்துக்காட்டுவது எது? அது ஏன் வித்தியாசமாகக் காணப்படுகிறது? ஏனென்றால், இது தேவனுடைய புத்தகம். அந்தப் புத்தகத்தின் ஆக்கியோன், தேவனே! அதைத் தோற்றுவித்தவர் அவரே. இந்த வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் அனைத்துக்கும் மூல கர்த்தா அவரே!

தேவன் ஆசிரியராய் இருந்து எழுதிய புத்தகம் ஒன்றே. அதுவே வேதாகமம்! அது ஒன்றே தேவனுடைய உள்ளத்தின் சிந்தனைகளை மனிதனின் உள்ளத்துக்குக் கொடுக்கிறது. இது ஒன்றே தேவனுடைய குணாதிசயத்தையும், மனிதனுடைய எதிர்கால வாழ்வின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அந்தத் திட்டம் நேரடியாக ஆக்கியோனாகிய அவரிடமிருந்தே வருகிறது.

புகழ்பெற்ற சில புத்தகங்களைப் பாருங்கள். வெப்ஸ்டர் அகராதி, ஜோசப் ஸ்மித் எழுதிய “மார்மன் பற்றிய புத்தகம்”, மேரி பேக்கர் எடி எழுதிய “வேதாகம வெளிச்சத்தில் விஞ்ஞானமும், ஆரோக்கியமும்”, L.ரான் ஹப்பார்டு எழுதிய “டயனெட்டிக்ஸ்” (சிந்தனை) இந்தப் புத்தகங்கள் எல்லாம் தேவனால் எழுதப்பட்டவை அல்ல.

தேவனால் எழுதப்பட்ட புத்தகம் வேதாகமம்மட்டுமே! அது தனித்தன்மை வாய்ந்தது. அதைப்போல வேறொரு புத்தகமும் இல்லை. அதற்கு இணை ஏதும் இல்லை. அந்த இனத்தில் அது மட்டுமே உலகில் உள்ளது; தெய்வீக அதிகாரம் கொண்டது. வெளிப்படுத்துவதிலோ, அதிகாரத்திலோ, மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமையிலோ, வேறு எந்தப் புத்தகமும் இதற்கு இணை இல்லை.

2.வேதாகமம் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது!

தேவன் தம்மையும், படைப்புகளுக்கான தமது திட்டத்தையும் நமக்கு வெளிப்படுத்தத் தீர்மானித்தார். இது நம்மைப் பிரமிக்கவைக்காமல், நாம் அறிய வேண்டிய அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்திக் காட்டவேண்டும். என்று திட்டமிட்டார். அதற்கு அவர் தெரிந்து கொண்ட மார்க்கம் “அகத்தூண்டுதல்” ஆங்கிலத்தில் இதை “INSPIRATION” என்பர். வேதாகம நூல்களை எழுதுகிற வர்களின் உள்ளத்தில் இதை எழுது, இப்படி எழுது என்று தேவஆவியானவர் தூண்டிக்கொண்டே இருப்பார். நூல்களை எழுதுகிறவர்கள், தேவசித்தத்தின்படி அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ஜெபசிந்தையுடனும், பயபக்தியுடனும் அமர்ந்து எழுதுவார்கள்.

“அகத்தூண்டுதல்” என்பது வேறு. “வெளிப்படுத்துதல்” என்பது வேறு. இதை இப்படி சிந்தித்துப்பாருங்கள்.

“ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைவர் நியூயார்க்கில் உள்ள அவர்களுடைய அலுவலகத்துக்கு வரும்படி உங்களை அழைக்கிறார். அவரிடம் உங்களுக்குத் தெரிவிக்கும்படி ஒரு செய்தி உள்ளது. அது முக்கியமானது. இந்தப் பூமியையே குலுங்கச்செய்யும் தன்மை உள்ளது.

நீங்கள் அவருடைய அலுவலகத்துக்குள் நுழையும்போது, அவர் உங்களிடம் இப்படிச் சொல்கிறார். “தயவுசெய்து உட்காருங்கள். இந்த உலகத்தில் இருக்கும் வேறு எவருக்கும் தெரியாத ஒரு செய்தியை நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.” பின்னர் அவர் என்றென்றும் இந்த உலகத்தில் சமாதானம் ஏற்படக்கூடிய ஒரு திட்டத்தைத் தெரிவிக்கிறார்.

சிறப்பான அவருடைய திட்டத்தை அவர் உங்களிடம் விளக்கிக் கூறிக் கொண்டிருக்கும்போது, அவர் கூறுகிறார். “பொறுங்கள்; நான் கூறுவதையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் கம்பியூட்டரிடம் சென்று நான் உங்களிடம் கூறிய செய்தி அனைத்தையும் உங்கள் சொந்த வார்த்தைகளில் அதில் பதிவு செய்யுங்கள். நீங்கள் பதிவு செய்து அச்சு நகல் எடுத்து என்னிடம் காட்டுங்கள். நீங்கள் கூறுவது நான் எதிர்பார்க்கும் செய்திதானாவென்று நான் உறுதி செய்யவேண்டும்” என்கிறார்.

நீங்கள் எழுதத் தொடங்குகிறீர்கள்; தலைவர் உங்களிடம் கூறிய செய்தியை மாறாமல் அப்படியே நீங்கள் எழுத செயலாளர் வார்த்தைகளைத் தெரிந்தெடுத்துத் தந்து உதவுகிறார். நீங்கள் உங்கள் மொழிநடையில் உங்கள் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுத அனுமதிக்கிறார். அந்தப் பொதுச்செயலாளர் உங்கள் சிந்தனையை ஒருமுகப் படுத்துகிறார். அதை எழுதவும், சரியான வார்த்தைகளைத் தந்து எழுதவும் உதவுகிறார். இது ஒருவேளை வெளிப்படுத்து தலையும், அகத்தூண்டுதலையும் விளக்கப் போதுமான உதாரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் புரிந்துகொண்டபடி உங்களுக்கு விளக்கம் கூறுகிறேன்.

அந்தப் பொதுச்செயலாளர் உங்களை அழைத்து, உலக சமாதானத்துக்கான திட்டத்தை உங்களிடம் விளக்கிக் கூறினாரே, அதுதான் “வெளிப்படுத்துதல்” ஆகும். அவர் உங்களுக்கு வெளிப்படுத்தின செய்தியை நீங்கள் எழுதும்போது, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி, கருத்தைச் சரியாக எழுதுவதற்கு வழிகாட்டுகிறாரே, அதுதான் “அகத்தூண்டுதல்” ஆகும்” வேதாகமமானது தேவனுடைய உள்ளத்தை மனிதனின் உள்ளத்துக்கு வெளிப்படுத்துகிறது. மட்டுமல்ல, அது தேவனால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது. தேவன் வெளிப் படுத்தினதை மனிதர்கள் எழுதும்போது, அது தேவன் விரும்பியபடியே இருந்தது. தேவன் அப்படி இருக்கும்படி தமது அகத் தூண்டுதலால் அவர்களுக்கு உதவினார்.

வேதாகமம் “அகத்தூண்டுதல்” என்று கூறும்போது, அதன் பொருள் என்ன? வார்த்தைகளின் பொருள் எப்போதும் தெளிவாய் இருப்பதில்லை. இன்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் பொருள் வித்தியாசமாயிருக்கும். எனவே வேதாகமத்தில் “அகத்தூண்டுதல்” என்று மொழி பெயர்க்கத்தக்கதாக தேவன் என்ன கருத்தில் கூறினார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

“அகத்தூண்டுதல்” “தேவஆவி” “INSPIRATION” என்பது மூலபாஷையாகிய கிரேக்க மொழியில் “THEOPNE USTOS” என்று உள்ளது. இது இரண்டு சொற்கள் சேர்ந்த ஒருசொல், முதற்பகுதி “THEOS” என்பது தேவனைக் குறிக்கிறது. “PNEO” என்பது ஊதுதல், வெளி சுவாசம் விடுதல், சுவாசித்தல் என்று பொருள்படும். எனவே சொல் பொருளின்படி இதன் பொருள் “தேவனால் ஊதப்பட்டது” என்று பொருள். வேதாகமம் தேவனுடைய வாயிலிருந்து ஊதப்பட்டுப் புறப்பட்டு வந்தது. இதுவொரு முக்கியமான கருத்து. தேவனால் ஊதப்பட்டு, தூண்டப்பட்டு எழுதப்பட்டது என்று பொருள். இன்னொருவர் எழுதியதை தேவன் ஆசீர்வதிக்கவில்லை. தேவன் பவுல், யோவான், பேதுரு, ஏசாயா, மோசே போன்றவர்கள் எழுதிய புத்தகங்களைப் பார்த்துவிட்டு, “நல்லது இந்த புத்தகங்கள் நன்றாக எழுதப்பட்டது போல் தெரிகின்றன. நான் அவற்றை அங்கீகரித்து, அவற்றின்மீது என்னுடைய முத்திரையைப் பதிக்கிறேன் என்று கூறவில்லை. அப்படி இல்லவே இல்லை.

எழுதிமுடிக்கப்பட்ட புத்தகங்களை தேவன் ஆசீர்வதிக்கவில்லை. தம்முடைய வார்த்தை எழுதப்படும்போது தேவாவியானவர் எழுதுபவர்களின் உள்ளத்திலிருந்து எழுதத் தூண்டிக்கொண்டிருந்தார். அந்த எழுத்தாளர்கள் எழுதினார்கள். எழுதும்படி பொருளைத் தூண்டிக்கொண்டிருந்தவர் தேவஆவியானவரே!

தம்முடைய வார்த்தை எழுதப்படும் போது தேவாவியானவர் எழுதுபவர்களின் உள்ளத்திலிருந்து எழுதத் தூண்டிக்கொண்டிருந்தார். அந்த எழுத்தாளர்கள் எழுதினர். எழுதும்படி பொருளைத் தூண்டிக்கொண்டிருந்தவர் தேவஆவியானவரே!

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமோத்தேயு 3:16,17).

எரேமியா தீர்க்கதரிசி இப்படி எழுதியிருக்கிறார். நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக (எரேமியா 1:7.). கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது (2 சாமுவேல் 23:2).

இந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எழுதும் செயலைத் தொடங்கிவைத்தவர் தேவனே. தேவன்தான் பேசினார். தேவன்தான் செய்தியைக் கொடுத்தார். தேவன் தான் எழுதவேண்டியதைக் கொடுத்தார். அவர்கள் எழுதினார்கள். தாவீது, எரேமியா போன்ற எல்லா வேதாகம புத்தக எழுத்தாளர்களும் தேவனுடைய வெளிப்படுத்தலை முதலில் பெற்றுக்கொள்ளுவார்கள். தேவன் வெளிப்படுத்திய செய்தியை அவர்கள் எழுதும்போது, வார்த்தைகள் தெய்வீகமாக அவர்கள் உள்ளத்தில் தூண்டப்பட்டன. அவர்கள் ஆவியானவரின் உதவியுடன் தங்களுக்குத் தரப்பட்ட செய்திகளை எழுதி வைத்தார்கள்.

இது எப்படி நடந்தது? பவுலும், பேதுருவும், யோவானும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் இருந்தும் எழுதும்போது அவை எப்படி தேவசெய்தியாக மாறியது? அவர்கள் எழுதியது தேவன் அவர்கள் மூலம் எழுத விரும்பிய செய்திதானா என்று உறுதி செய்வது எப்படி? எது நடக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டால் ஆவியானவரின் அகத்தூண்டுதல் எப்படி நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

தேவன் தம்முடைய வார்த்தைகளை எவ்வாறு எழுதச்செய்தார் என்பது குறித்து ஐந்து தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவை ஒன்றின் மூலமும் ஆவியானவரின் அகத்தூண்டுதல் நடந்திருக்க முடியாது. அந்தப் புனைவுக் கருத்துக்களைக் காண்போம்.

1. அகத்தூண்டுதல் குறித்த இயற்கைக் கொள்கை

வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர். அவர் நாடகங்களை எழுதும்போது, ஒருமுறை கூட தாம் எழுதிய ஒரு வரியை அடித்ததில்லையாம். அவர் ஒரு அகத்தூண்டுதல் பெற்றுத்தான் அந்த நாடகங்களை எழுதினார்.

அதுபோலவே வேதாகமப் புத்தக எழுத்தாளர்களும் இயற்கையான ஒரு அகத்தூண்டுதலைப் பெற்று எழுதியிருக்கலாம். நம் எல்லாரிடமும் ஒரு தெய்வீகப் பொறி உண்டு. இந்த எழுத்தாளர்களிடம் அது சற்று அதிகமாக இருந்திருக்கும்; எனவே அவர்கள் எழுதினர்.

இந்தக் கொள்கையின்படி இத்தகைய அகத்தூண்டுதல் அறிவுத்திறன்மிக்க மேதைகள், கவிஞர்கள். பாடகர்கள் போன்ற தனித்திறமையும் படைப்பாற்றலும் உள்ளவர்களிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், மனிதனின் மன உந்துதலும் தூண்டுதலும் தேவனுடைய தூண்டுதல் அல்ல. மனிதனுடைய ஆவியின் தூண்டுதலால் ஒரு கிரியையை அவன் செய்வானானால் இயல்பாகவே அவனிடம் உள்ள தவறு செய்யும் தன்மை அவனுடைய எழுத்தில் பிரதிபலிக்கும்.

வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடைய தாயிராதென்று நீங்கள் முந்தி அறிய வேண்டியது (2 பேதுரு 1:20). எனவே வேதாகமத்தில் உள்ள எந்தக் காரியமும் ஒரு மனிதனிடத்தில் இயற்கையாக உள்ள உந்துதலினால் எழுதப்பட முடியாது.

2. சொல்வதைக் கேட்டெழுதும் அகத் தூண்டுதல் கொள்கை

இந்தக் கொள்கையின்படி வேதாகமத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் தேவனால் கூறப்பட்டவை. இதை எழுதினவர்கள் தேவன் கூறியதைக் கேட்டு அலுவலகங்களில் எழுத்தர்கள் எழுதுவதுபோல எழுதிவைத்தனர் என்பதாம்.

ஜமைக்காவில் உள்ள வேதாகமத்துக்குத் திரும்புக ஊழியத்தின் தலைவர் சாமுவேல் பிட்ஸ் ஹென்றி என்பவர் ஜமைக்கா முழுவதும் பல இடங்களில் “நிர்வாகப்யிற்சிக்கல்லூரி” நடத்தி வருகிறார். இந்தச் சாமுவேலின் தகப்பனார் ஒரு அற்புதமான இயந்திர அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் புத்தகப் பகுதிகள் தெளிவாகவும், வேகமாகவும் வாசிக்கப்பட்டன. சாமுவேல் எட்டுவயதாய் இருக்கும்போதே இந்த இயந்திரத்தின் உதவியுடன் மிக வேகமாகச் செய்திகளைப் பதிவு செய்யப் பழகிவிட்டார். சாமு வேலுக்கு வயது 8 இருக்கும்போதே இதைச் செய்தார். இவர் தன்னைக் காட்டிலும் 3 அல்லது 4 மடங்கு அதிகமான வயதுள்ளவர்களைக் காட்டிலும் அதிகத் திறமையாகச் செய்துமுடித்துவிட்டார். சாமுவேல் பிட்ஸ் ஹென்றிக்கு இந்த முறையில் தேவன் கூறுவதை எழுதிவிட முடியும். ஆனால், தெக்கோவா ஊர் மேய்ப்பனான ஆமோஸ்-க்கும், கப்பர்நகூமில் உள்ள மீன்பிடிக்கும் தொழில் செய்துவந்த பேதுருவுக்கும் சுலபமாய் இருக்குமா? நிச்சயமாக அவர்களால் முடி யாது. அவர்கள் எழுதும்படி தேவன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருத்திருக்க முடியாது.

வேதாகமம் தெய்வீக அன்பின் சரிதையைக் கூறும் ஒரு புத்தகம். நம்மை அதிகமாக நேசித்ததால் நமக்காக மரிக்கும்படி தமது குமாரனையே அனுப்பித்தந்த தேவன் வெறும் ஒரு இயந்திரம் அல்ல.

3. அகத்தூண்டல் பற்றிய கருத்துக் கொள்கை

இந்தக் கொள்கைக்காரர்கள் வேத வசனங்களை அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்டவை அல்ல. எழுதப்பட்டிருப்பவைகளின் பொதுக்கருத்து மட்டுமே அகத்தூண்டல் பெற்றவை. வேதாகம நூல்களை எழுதியவர்கள் தேவனுடைய கருத்துத் தொகுதிகளைத் தெரிந்துகொண்டு வந்து அந்த மூலக் கருத்துக்களை விளக்கித் தங்களாகவே தங்கள் சொந்த வார்த்தைகளில், மொழிநடையில் எழுதினர். அவர்கள் தேவனுடைய கருத்துக்களை எப்படிப்புரிந்து கொண்டிருந்தார்களோ, நினைவில் வைத்திருந்தார்களோ, அவற்றின் அடிப்படையில் எழுதினார்கள். இப்படி மனிதர்கள் வேதாகமத்தை எழுதியிருந்தார்களானால், அது தெய்வீகமாய் இருக்க முடியாது. மனுஷீகமாகத்தான் இருக்கும். இந்தக் கருத்து வேதாகமத்தில் உள்ள பல வசனங்களுக்கு முரணாய் இருக்கிறது (2 பேதுரு 1:20; கலாத்தியர் 3:16, 1 கொரிந்தியர் 2:12,13, மத்தேயு 5:18).

4. அகத்தூண்டுதல் மாறுபடும் கொள்கை

இந்தக்கொள்கை வேதாகமத்தில் சில பகுதிகள் தேவஆவியினால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை. மற்றவை அப்படி அல்ல என்பது.

முற்போக்குக் கொள்கையுள்ள பல சபைப் பிரிவுகளும், இறையியற் கல்லூரிகளும் இறையியலாளர்களும் வேதாகமத்தில் சிலபகுதிகள் மட்டும் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று போதிக்கிறார்கள். அவர்களுக்குச் சம்மதம் இல்லாத மீதிப்பகுதிகள் தேவனால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவைகள் அல்ல என்கிறார்கள். அவர்கள் பாவம், இரத்தத்தின் மூலம் பிராயச்சித்தம் செய்தல், எதிர்கால நியாயத்தீர்ப்பு இவைக் குறித்த வேதப்பகுதிகள் அவர்களுக்குப் பிரியம் இல்லாதவை. எனவே இப்பகுதிகளைப் புறக்கணித்துத் தள்ளிவிடுகின்றனர். இவை தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை அல்ல என்று கூறுகிறார்கள். எனவே வேதாகமம் அரைகுறையாக அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது என்று வாதிடுகிறார்கள். அவர்கள் தாங்களே வேதாகமத்தில் இன்னின்ன பகுதிகள் எல்லாம் அகத் தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை; இந்த இந்தப் பகுதிகள் எல்லாம் தேவனுடைய தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை அல்ல என்று தீர்ப்பு கூறுகிறார்கள். இது எவ்வளவு முடடாள்தனம்!

5. அகத்தூண்டுதல் பற்றிய R E M S கொள்கை

REMS என்பது ஒரு சுருக்க வார்த்தை. நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் சேர்ந்து உருவானது.

R – Religious – சமய சம்பந்தமான

E – Ethical – நீதி ஒழுக்கம் சார்ந்த

M – Moral – அறநெறி சார்ந்த

S – Spiritual – ஆவிக்குரிய

இந்தக் கொள்கைக்காரர்கள் இந்தக் குறிப்பிட்ட நான்கு தலைப்புகளிலும் உள்ள வேதப்பகுதிகள்மட்டும் தேவனால் அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்டவை. மற்றப்படி, வரலாறு சம்பந்தப்பட்டவைகளையும் அறிவியல் விஞ்ஞானம் சம்பந்தப்பட்டவைகளையும் கல்வி அறிவூட்டுதல் சம்பந்தப்பட்டவைகளையும் உலகப் பொருட்கள் சம்பந்தப்பட்டவைகளையும் பற்றிக் கூறும் வேதப்பகுதிகள் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. இந்தக் கொள்கைக்காரர்கள் கூறுவதுயென்னவென்றால் வேதாகமம் ஒரு புவியியல் பாடப்புத்தகமாகவோ, அறிவியல் பாடப்புத்தகமாகவோ இருக்கப் போவதில்லை. எனவே அப்பகுதிகளில் எல்லாம் விளக்கக் குறிப்புகள் சரியாக இருக்காது. ஆனால் இயேசு கூறுகிறார்: பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12).

இந்தப் பூமிக்கடுத்த காரியங்களில் நாம் தேவனையும், அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கவில்லையானால், நித்திய காரியங்களைக் குறித்து அவர் கூறும்போது எப்படி விசுவாசிப்போம்?

இல்லை, வேதாகமம் சிலபகுதிகளில் மட்டும், அல்லது ஆவிக்குரிய காரியங்களைப் போதிக்கும் இடங்களில் மட்டும் தேவஆவியினால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டதல்ல. “அகத்தூண்டல்” என்பது இருந்தால் முழுவதிலும் இருக்கும், இல்லையேல் ஒன்றிலும் இருக்காது என்பது அவர்களின் வாதம்.

தேவன் கூறுகிறார்: வேதாகமம் முழுவதும் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது. நூறுசதவீதம் ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதுதான். தேவனுடைய ஆவியானவர் சில மானிட எழுத்தாளர்களை தேவனுடைய சிறப்பான வெளிப்பாடுகளை அறிந்துகொள்ள உதவினார். இப்படி தேவவெளிப்பாடு பெற்று, தேவஆவியானவரின் அகத்தூண்டுதலுடன் எந்தத் தவறும் இல்லாமல், எதுவும் விடுபடாமல் வேத நூல்களை எழுதினார்கள்.

அகத்தூண்டுதல் பற்றிக் குறிப்பிடும் போது, இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுவதுண்டு அவை:

1. Plenary – முழுமையான, குறைவற்ற என்று பொருள்.

2. Verbal – ஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமாகச் சரியாக அமைதல்.

இவற்றில் முழுமையான அகத் தூண்டுதல் என்பது வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களும் தேவஆவியினால் தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது என்பதைக் குறிக்கும்.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது (1 தீமோத்தேயு 3:16). வார்த்தைகளின் அகத்தூண்டுதல் என்பது, வேதநூல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்திலும்-புவியில் சம்பந்தப்பட்டவைகள், அறிவியல் சம்பந்தப்பட்டவைகள், வானவியல் சம்பந்தப்பட்டவைகள் போன்ற வார்த்தைகளைச் சரியானதாகவும், பொருத்தமானதாகவும், இலக்கண முறைப்படி சரியான அமைப்பிலும் வரும்படியாக எழுதும்படி தேவன் தமது ஆவியானவர் மூலம் உதவி செய்வார்.

தேவன் எல்லா வேதநூல் எழுத்தாளர்களையும் சமமான அளவில் அகத்தூண்டுதல் கொடுத்து எழுத உதவினார். தேவன் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சரியாக அமையும் படி உதவினார். அவர் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சரியாக அமையும்படி உதவினார்.

பவுல், பேதுரு, மோசே மற்றும் எல்லா வேதாகமப்புத்தக எழுத்தாளர்களும் எழுத வேண்டிய காரியங்களை தேவ ஆவியினால் அருளிச்செய்தார். இந்த அகத்தூண்டுதல் வேதாகமத்தை மற்ற எல்லாப் புத்தகங்களையும்விட வித்தியாசமானதாகக் காட்டுகிறதா? ஆம்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் வரம் பெற்ற நாடகாசிரியராய் இருக்கலாம். அவர் சரியான வார்த்தைகளைத் தெரிந்தெடுக்கவும். தான் வெளிப்படுத்த விரும்பியதைச் சரியாக வெளிப்படுத்தவும் தேவஆவி யானவர் அவருக்கு உதவி செய்யவில்லை.

பரதேசியின் மோட்ச பிரயாணம் என்னும் அற்புதமான நூலை ஜாண் பனியன் எழுதினார். அவருக்கும் எசேக்கியேல், தாவீது, மோசே, மத்தேயு போன்றவர்களுக்கு தேவஆவியானவரின் தூண்டுதல் கிடைத்ததுபோல அகத்தூண்டுதல் கிடைக்கவில்லை.

வேதாகமம் தேவனால் தூண்டப்பட்டு எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவனுடைய வாயினால் பேசப்பட்டவைகளாய் இருக்கிறபடியால் இது உலகில் வெளியிடப்பட்ட மற்ற எல்லாப் புத்தகங்களிலிருந்தும் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் புத்தகங்களிலெல்லாம் உலகெங்கும் அதிகம் விற்பனையாகும் புத்தகமாக வேதாகமம் காணப்படுகிறது. வாழ்க்கையை மாற்றும் ஒரே புத்தகம் இதுவே. இதைப் போன்று வேறு புத்தகம் எதுவும் இல்லை.

வேதாகமத்தை இன்றே வாசித்து, அதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள். அப்பொழுது வேதாகமத்தை எழுதிய ஆக்கியோன் தேவனையும் கண்டுகொள்வீர்கள். அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளுவீர்கள்.

3. வேதாகமம் தவறில்லாதது. மாறாதது!

வேதாகமத்தின் தனித்தன்மையைக் காட்டுவதற்கு ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகள் உண்டு. அவைகள்

1. INSPIRATION – அகத்தூண்டுதல் பெற்றது.

2. ILLUMINATION – உட்கருத்தை உணர்த்திக் காட்டுவது.

3. INERRANCY – தவறில்லாதது.

4. INFALLIBILITY – பிழையில்லாதது.

இந்த நான்கு வார்த்தைகளும் I என்னும் ஆங்கில எழுத்தில் தொடங்குவதைக் கவனிக்கவும். இவற்றில் முதலாவது வார்த்தை அகத்தூண்டல் (Inspiration) பற்றிப் பார்த்துவிட்டோம். மற்ற மூன்றையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அவற்றுக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பைச் சிந்திப்போம்.

2. உட்கருத்தை உணர்த்திக் காட்டுவது

அப்படி என்றால் என்ன?

கர்த்தரால் அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ள உதவுதல். அறிவு பூர்வமாக மட்டுமல்ல, சொற்பொருளின் படி மட்டுமல்ல, ஆவிக்குரிய பிரகாரமாக அந்த கருக்தை அறிந்துகொள்ளவும், அந்த பகுதி அல்லது வார்த்தையின் மூலம் தேவன் நமக்குத் தரும் செய்தி என்ன வென்று உணர்த்துவதும் ஆகும்.

பரிசுத்த ஆவியானவர் வேதவசனங்களை நமக்கு விளக்கிக்காட்டும்போது, புரிந்துகொள்ள உதவும்போது. அந்த வார்த்தையின் பொருள் என்ன? என்று கற்பிக்கிறார்.

அது நமது வாழ்க்கையை எப்படி மாற்றமுடியும்? என்று காட்டுகிறார்.

அது எப்படி நமக்கு வழிகாட்ட முடியும் என்றும் காட்டுகிறார்.

முந்தின அதிகாரத்தில் நாம் கண்ட உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளர், உலகத்துக்குச் சமாதானம் கொண்டுவர ஒரு திட்டத்தை உங்களிடம் விளக்கிக் கூறினார். நீங்கள் அதைக் கேட்டு, அந்தத் திட்டத்தை உங்கள் சொந்த வார்த்தையிலும், மொழிநடையிலும் எழுதினீர்கள். ஆனால், அவர் நீங்கள் எழுதுவது அவருடைய உள்ளத்திலிருந்த கருத்துத்தானா? அவர் தெரிவிக்க விரும்பிய செய்திதானா? என்று சரிபார்த்து, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், சரியான விளக்கம் கொடுக்கவும் உதவி செய்தார். தன் செய்தியை உறுதிசெய்து கொண்டார். அவர் உங்களை அழைத்துத் தன் அலுவலகத்தில் அமரச்செய்து உலக சமாதானத் திட்டத்தை உங்களிடம் விளக்கிக்கூறியதே வெளிப்படுத்துதல் ஆகும்.

பின்னர் நீங்கள் எழுதும்போது சரி யான பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், சரியான விளக்கத்தைக் கூறவும் உங்களுக்கு உதவியதே அகத் தூண்டுதல் ஆகும்.

இப்படி வெளிப்படுத்தல் பெற்று, அகத் தூண்டுதலின் உதவியுடன் நீங்கள் எழுதி முடித்ததன் கருத்து உங்களுக்குச் சரியாகப் புரிந்திருக்காது. எனவே அடுத்தபடியாக உட்கருத்தை உணர்ந்து கொள்ளுதல் (Illumination) தேவை.

பொதுச் செயலாளர் நீங்கள் எழுதிய தற்கு விளக்கம் தருகிறார். நீங்கள் எழுதியதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். நீங்கள் எழுதியதை நீங்கள் புரிந்துகொள்வதன்மூலம் அது உங்கள் இருதயத்துக்கும் உள்ளத்துக்கும் சென்று சேர்ந்துவிடுகிறது. அந்தச் சமாதானத்திட்டம் செயல்படுத்தப்படலாம். நீங்களும் அதற்கு உதவி செய்யமுடியும் என்று நீங்கள் அறியும்போது, இந்தச் செய்தி உங்கள் இருதயத்தில் சென்றடைந்துவிட்டது. உங்கள் உள்ளத்திலும் நிறைந்துவிட்டது! இதுதான் உட்கருத்தை உணர்ந்துகொள்வதின் பலன். இந்தச் செய்தி உங்கள் உள்ளம் வழியாகச் சென்று உங்கள் இருதயத்தை மாற்றிவிட்டது.

வேதாகமத்தை வாசிக்கும்போது இது நமக்கு மிகவும் தேவைப்படுகிறது. நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை வாசிக்கும்போது, நாம் அதைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து நன்மை பெறவும், நீங்கள் வாசிக்கும் பகுதியை தேவன் உங்களுக்கு உணர்த்திக்காட்ட வேண்டியது அவசியமாகும். அதற்கு இரண்டு பதில்கள் உள்ளன.

முதலாவதாக, நம்மிடம் இயற்கையாக இருக்கும் குருட்டுத்தன்மை, ஆவிக் குரிய காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாமற் செய்துவிடுகிறது. வேதாகமம் தேவனுடைய புத்தகம். வேறு எங்கும் நாம் காணமுடியாத ஆவிக்குரிய சத்தியங்கள் நிறைந்தது. ஆவிக்குரிய மனப்பான்மை இல்லாதவர்கள் வேதத்தை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாது.

கர்த்தருடைய வசனம் கூறுகிறது: ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான் (1 கொரிந்தியர் 2:2, 1 கொரிந்தியர் 2:14).

உலகம் அறியாத ஆவிக்குரிய சத்தி யங்களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றவர்கள் மட்டுமே, தேவவசனங்களில் உள்ள ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்து கொள்ளமுடியும். பேதுரு இயேசுவிடம், நீர் ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய கிறிஸ்து என்று கூறியபோது இயேசு என்ன சொன்னார்? இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை (மத்தேயு 16:17). இந்த உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த அறிவாளிகளால் கூடப் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் உண்டு. ஏனென்றால் அவர்கள் ஆவிக் குரியவர்கள்அல்ல. பரிசுத்த ஆவியானவர் தங்களுக்குள் வாசம் செய்யாவிட்டால் மிகச்சிறந்த அறிவாளிகள்கூட எளிய ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி பாவம் அவர்களுடைய கண் களை மறைத்துவிடுகிறது. எனவேதான் தேவஆவியால் உட்கருத்து உணர்த்தப்படுவது மிகவும் முக்கியமானது.

மக்கள் ஏன் வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாதபடி மாம்சக்கண்கள் குருடாக்கப்பட்டிருப்பது முதல் காரணம். அவர்கள் சாத்தானாலும் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிக் கூறினார்: எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால். கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2 கொரிந்தியர் 4:3,4).

சாத்தானானவன் இப்பிரபஞ்சத்தின் தேவனாயிருக்கிறான். மக்கள் தேவனுடன் உறுதியான உறவுகொள்ள முடியும் என்ற சத்தியத்தை உணரமுடியாதபடி அவன் செய்துவிடுகிறான். இதைத்தான் சாத்தான் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான்.

வேதத்தின் உட்கருத்தை நாம் உணருதல் மிகவும் முக்கியம். உங்களுக்கு வேதாகமத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்குமானால், நீங்கள் உங்களைத் தற்பரிசோதனை செய்யுங்கள்.

நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம் செய்கிறாரா?

பரிசுத்தாவியானவர் உங்களுக்குள் இல்லையானால், அவர் வேதத்தின் உட் கருத்தை நீங்கள் புரிந்துகொள்ள உதவி செய்யமாட்டார். நீங்கள் ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாது. உங்களுக்குள் பரிசுத்தாவியானவர் இருப்பாரானால், நீங்கள் வேதத்தை வாசிக்கத் தொடங்கு முன் அமைதியாய்ச் சில நிமிடங்கள் ஜெபம் செய்யுங்கள். ஆவியானவர் உங்கள் ஆசிரியராயிருந்து வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ள உதவிசெய்யும்படி வேண்டுங்கள். ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று வேதம் கூறுகிறது.

I – வரிசையில் அடுத்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. Inerrancy and Infalliability தவறாதது, பிழை இல்லாதது. பலர் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒரேபொருள் உள்ளதுபோலப் பயன்படுத்துவர். ஆனால், அவற்றின் கருத்து வித்தியாசமானது. ஒரு பழமொழி கூறப்படுவதை அறிவோம். தவறுவது மனித இயற்கை; மன்னிப்பது தேவனின் இயற்கை. தவறுவது (Inerrancy) என்றால் ஒரு தவறைச் செய்தல். தவறாதது என்று ஒன்று இருக்குமானால் அதில் தவறு ஏதும் இருக்காது. இதை ஆங்கிலத்தில் Error Free என்பார்கள். அதைத்தான் தவறில்லாதது என்று பதில் கூறுகிறோம்.

வேதாகம நூல்களை முதன்முதலில் எழுதியவர்கள் அவற்றில் ஒரு பிழையும் இல்லாதமுறையில் எழுதினார்கள். அவற்றில் தவறுகளோ, முரண்பாடுகளோ இல்லாதவகையில் எழுதியிருந்தார்கள். தோற்சுருள்களிலும் பாப்பிரஸ் தகடுகளிலும் எழுதப்பட்ட மூலப்பிரதிகள் தவறில்லாதவைகளாய் இருந்தன.

அடுத்த வார்த்தை Infallible – பிழை யில்லாதது. இதன்பொருள் வேதாகமத்தில் தவறு இருக்கமுடியாது என்பதாகும். வேதாகமம் தவறில்லாததாய் இருப்பது மட்டுமல்ல; அது தவறு எதையும் வைத்துக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் எந்தத் தவறும் இருக்கமுடியாது. சரியில்லாத எதுவும் வேதாகமத்தில் இடம்பெறமுடியாது. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியம் என்றென்றும் நிலைத்து நிற்கும். எக்காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் அதில் எவ்வித மாறுதலும் ஏற்படாது.

வேதாகமம் தேவனால் தரப்பட்டுள்ளது. எனவே அதில் தவறு இல்லை, தவறு இருக்கவும் முடியாது. இப்படித் தவறில்லாத புத்தகம் வேதாகமம் மட்டுமே. நான் பல டஜன் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், அவற்றில் தவறில்லாத புத்தகங்கள் ஏதும் இல்லை.

வேறு எந்தப் புத்தகமும் தவறே இல்லாதது என்று கூறப்பட முடியாது. வேதாகமம் இப்படித் தவறில்லாததாகவும் பிழை இல்லாததாகவும் இருக்கக் காரணம் என்ன? தேவனுடைய குணாதிசயமே அதற்குக் காரணம். அவரிடம் தவறு அல்லது பிழை எப்படி இருக்கமுடியும்?

பொய்யுரையாத தேவன் (தீத்து 1:3) என்று பவுல் குறிப்பிடுகிறார். தேவன் உண்மையில்லாத எதையும், சரியில்லாத எதையும், தவறான எதையும், பிழையான எதையும் வேதபுத்தகத்தில் அனுமதிக்கமாட்டார்.

உதாரணமாக, பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் ஒரு தவறான செய்தியை எழுதுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தேவனுக்கு அனைத்தும் தெரியும். பவுல் எழுதியிருப்பது தவறு என்றும் தெரியும். நீதியுள்ள தேவன் இதைக்கண்ட பின்னரும் ஒன்றும் செய்யாமல் இருப்பாரா? நான் வணங்கும் பரிபூரண தேவன் அப்படிச் செய்யமாட்டார்.

வேதாகமம் தவறில்லாதது. வேதாகமத்தில் எந்தப் பிழையும் இருக்கமுடியாது. ஏனெனில் அது வேனுடைய வார்த்தை.

வேதாகமம் தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையது. உலக வரலாற்றில் எல்லாப் புத்தகங்களிலிருந்து வேதாகமம் மட்டும் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது மற்ற எல்லா எழுத்துக்களைப் பார்க்கிலும் வித்தியாசமானது. ஏன்? ஏனெனில் இது தேவனுக்குச் சொந்தமானது. இது தேவனுடைய குணாதிசயத்தைப் பிரதிபலிக்கிறது. உலகமக்கள்மீது தேவன் வைத்திருக்கும் அன்பை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

4. வேதாகமம் நித்தியமானது. பரிபூரணமானது!

வேதாகமம் நித்தியமானது. தேவன் நித்தியமானவராக இருந்தால் அவருடைய வார்த்தையும் நித்தியமானதுதானே! எனவே வேதம் நித்தியமானது என்றவுடன் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தேவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதுதான் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். அவருடைய உள்ளத்தில் உலகம் தோன்றுவதற்கு முன்னரே இருந்த சிந்தனைகளும், வார்த்தைகளும் வேதாகமத்தில் உள்ளன. காலம்கடந்த பின்னரும் அவை அவருடைய மனதில் இருக்கும்.

நாம் ஒவ்வொரு காரியத்தையும் காலத்தோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கிறோம். ஆனால் தேவன் அப்படிச் செய்வதில்லை. அவர் காலத்துக்கு அப்பாற்பட்டவர். அவருடைய வார்த்தையில் காணப்படும் சத்தியங்கள் நித்தியமானவை. ஏனெனில் அவை என்றென்றும் சத்தியமாகவே இருக்கும்.

நிச்சயமாகவே இந்தச் சத்தியங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் எழுதப்பட்டன. ஆனால், இந்த எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தைக்குக் காலம் இல்லை; அது நித்தியமானது! ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் சங்கீதக்காரனான தாவீது, “கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது” என்றான் (சங்கீதம் 119:89)

தேவனுடைய வார்த்தையை பவுல் எழுதும்போது நிலைப்படுத்தப்படவில்லை. பவுல் எழுதுவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே நிலைப்படுத்தப்பட்டிருந்தது. வேதாகமத்தின் முதல் ஆகமங்களான ஐந்தாகமங்களையும் எழுதும்போது வேதாகமம் நிலைப்படுத்தப்படவில்லை. வேதாகமம் மோசே இவைகளை எழுதுவதற்கு முன்னரே இருந்தது.

வேதாகமம் எழுதப்படுவதற்கு ஒரு ஆரம்பம் இருந்தது. ஆனால் அதில் இருக்கும் செய்திக்கும், சத்தியத்துக்கும் ஆரம்பம் இல்லை. இந்த வேதாகமம் நித்தியமானபடியால் எப்போதும் நடை முறையில் உள்ளதாகவே இருக்கும்.

கர்த்தருடைய வேதத்தை நித்தியமானதாக இல்லாமல் ஆக்கவும், அழித்துவிடவும் பலர், பலவகைகளில் முயற்சி செய்தனர். அதை அழித்து ஒழித்துவிடவும், வரலாற்றில் இடம்பெறாமல் செய்யவும் என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அனைத்தையும் செய்தனர்.

பாபிலோனியர் முயற்சித்தார்கள். தோல்வி அடைந்தார்கள்.

அந்தியோகு எப்பிபானஸ் யூத சமயத்தையும் அவர்களுடைய பரிசுத்த நூல்களையும் அழிக்க நினைத்தான். தோல்வியடைந்தான்.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ரோமச் சக்கரவர்த்தியான டயோக்கிளீஷியன் மக்கள் கிறிஸ்தவர்களாக மனந்திரும்பிக் கிறிஸ்தவம் வலுப்பெறுவதைத் தடுக்கச் சட்டத்தின்மேல் சட்டம் பிறப்பித்தான். அவன் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களைக் கொன்றான். வேதாகமங்களை சுட்டெரித்தான். மிகவும் பெருமிதத்துடன், கிறிஸ்தவ சமயம் அழிக்கப்பட்டுவிட்டது. விக்கிரக வணக்கம் புதுப்பிக்கப்பட்டது என ஒரு தாமிரப் பட்டயத்தில் எழுதினான். ஆனால், அந்த ரோமப்பேர ரசால் தேவனுடைய நித்திய வார்த்தை யாகிய வேதாகமத்தை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியவில்லை.

பிரான்ஸ் தேசத்தில் உள்ள, சமயப்பற் றில்லாத வால்ட்டயர் ஒருதடவை இப்படிக் கூறினான். இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் கிறிஸ்தவசமயம் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து ஒழிந்துபோகும். வரலாற்றில்மட்டும் இடம்பெறும் என்றான். ஆனால், அந்த வால்ட்டயர் 1778ஆம் ஆண்டு இறந்துபோனான். வேதாகமம் ஒருபோதும் அழிவதில்லை.

இன்றும் கதை அப்படியேதான் இருக்கிறது. ஹாலிவுட்காரர்கள், மனித இன நலக் கொள்கைக்காரர்கள், பரிணாமக் கொள்கைக்காரர்கள், சில சபைப்பிரிவினர் ஆகியோர் வேதாகமத்தை அழித்து விடவும், அதன் சக்தியைக் குறைக்கவும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். தேவனுக்கு முன்பாகத் துணிகரமான பாவங்களைச் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், வேதாகமம் நித்தியமானது!

வேதாகமத்தை எரித்துப்போடவும், அழித்துப்போடவும், துண்டுதுண்டாகக் கிழித்தெறியவும் எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் தோல்வியடையும். ஆண்டவராகிய இயேசு இப்படியாகக் கூறியிருக்கிறார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை (லூக்கா 21:33).

வேதாகமத்தைத் தனிசிறப்புமிக்கதாக ஆக்கும் இன்னொரு அம்சம் என்ன வென்றால், வேதாகமம் பூரணமானது என்பதாகும்.இந்தத் தன்மை இதை வேறு புத்தகங்களிலிருந்து பிரித்து வித்தியாசமானதாகக் காட்டுகிறது. வேதாகமம் தேவனைப் பூரணமாக வெளிப்படுத்தும் ஒரு புத்தகமாகும்! தேவனைப்பற்றி வெளிப்படுத்துவதில் ஒருபகுதி மட்டுமல்ல, வெளிப்படுத்தப்பட்டது கொஞ்சம். இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டியது உண்டு என்பதல்ல. வேதாகமம் பூரணமானது. ஒரு குறைவுமில்லாதது. அது பூரணமான வட்டம்!

உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைகளில் உள்ள (மேய்ப்பர்கள் முதல் இராஜாக்கள் வரை) வெவ்வேறு காலங்களில் 40 எழுத்தாளர்களால் 1500 வருடகால இடைவெளிக்குள் எழுதி முடிக்கப்பட்ட புத்தகங்கள் எப்படி பரிபூரண மானதாக இருக்கமுடியும்?

இந்த வேதாகமத்தின் கடைசிப்பகுதி 19 நூற்றாண்டுகளுக்குமுன் எழுதி முடிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை நாம் எவ்வளவோ காரியங்களைப் படித்து அறிந்துள்ளோம்.

வேதாகமத்தின் கடைசிப்பகுதி 19 நூற் றாண்டுகளுக்கு முன் எழுதி முடிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை நாம் அநேகக் காரியங்களைப் படித்து அறிந்துள்ளோம்.

1950 முதல் சோவியத் யூனியனும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் நடைபெற்றுவரும் விண்வெளி ஆராய்ச்சிகள், மனிதன் சந்திரனில் காலடி வைத்து, நடந்து சந்திரனில் உள்ள மண்கட்டிகளை எடுத்து வந்தது, எத்தனையோ செயற்கைக் கோள்களை அனுப்பியது, விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளது, சுனிதா வில்லியம்ஸ் என்னும் விண்வெளி வீராங்கனை ஆறுமாத காலம் விண்வெளியில் பறந்து ஆராய்ச்சிகள் செய்து, சாதனைகள் படைத்து வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியது இவற்றையெல்லாம் அறிந்துகொண்டிருக்கிறோம்.

பரவக்கூடிய கொடிய நோய்களைப் பற்றி எவ்வளவு காரியங்கள் அறிந்திருக்கிறோம்? (HIV, AIDS, புற்றுநோய், Corona, கொரோனா).

விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் கம்யூட்டர் வகைகள், செல்போன்கள் இவை புரியும் விந்தைகளை என்னவென்பது? சமீபகாலத்தில் இவ்வளவு கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் நிகழ்ந்திருக்கும்போது, நாம் எப்படி வேதாகமத்தைப் பூரணமானது என்று கூற முடியுமென்று தோன்றுகிறதல்லவா!

வேதாகமம் பூரணமானது என்று நான் கூறுவதன் உட்பொருள், ஆவிக்குரிய நிலையில் நாம் அறியவேண்டிய அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது என்பதே. வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை யோவான் எழுதி முடித்தபின் ஆவிக்குரிய எந்தப் புதிய சத்தியமும் இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை!

தேவனைப்பற்றியும், அவரது நோக்கங்கள், திட்டங்கள் அனைத்தையும் வேதாகமம் வெளிப்படுத்துகிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு இவ்வளவும் போதுமானது. இவையனைத்தையும் நீங்கள் வேதாகமத்தில் பெற்றிருக்கிறீர்கள்.

இன்று உலகில் ஏன் இவ்வளவு மரணங்கள், அழிவுகள், பிரச்சனைகள், வேதனைகள், துன்பங்கள் இருக்கின்றன? என்று அறியவேண்டுமானால் உங்களுக்குத் தேவை இந்த வேதாகமமே! அது மனிதனுடைய பாவம், அந்தப்பாவத்தால் ஏற்படும் விளைவுகள் இவற்றை நமக்கு வேதாகமம் விவரித்துக்காட்டும்.

தேவனுடைய அன்பு, இரக்கம், கிருபை இவற்றைக்குறித்து அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களைப் போக்க, உங்களுக்குப் பதிலாக மரணதண்ட னையைத் தம்மீது ஏற்றுச் சிலுவையில் மரிக்க அவர் செய்த தியாகத்தைப்பற்றி அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

கல்வாரிச்சிலுவையில் இயேசு மூன்றாணிகளில் தொங்கி, இரத்தம் சிந்தி உங்களுக்காக உயிர்விட்டது, அடக்கம் பண்ணப்பட்டது, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தது, இவற்றைப்பற்றி அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

இயேசு உயிர்த்தெழுந்த பின்னரும் உலகில் வாழ்ந்து மக்களுக்குக் காட்சியளித்து, தமது சீஷர்களுக்குக் கடைசிக் கட்டளை கொடுத்துப் பரமேறிச் சென்றதை அறிய வேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

பரிசுத்தவான்களாய் மரிப்பீர்களானால் நீங்களும் உயிர்த்தெழுவீர்கள். கிறிஸ்துவின் வருகையின்போது பரிசுத்தவான்களாய் வாழ்வீர்களானால் உங்கள் சரீரம் மறுரூபமாக்கப்பட்டு நீங்களும் நடுவானத்தில் இயேசுவோடு இருக்கும்படி எடுத்துக்கொள்ளப்படுவீர்கள் என்ற சத்தியத்தை அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

கிறிஸ்துவின் வருகையின்போது நீங்களும் சந்தோஷமாக கிறிஸ்துவுடன் எழுப்பப்பட வேண்டுமானால் நீங்கள் எப்படி வாழவேண்டும்? என்று அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

ஒரு வேதாகம அகராதி உங்களுக்குச் சொற்களின் விளக்கத்தைத் தரும். நீங்கள் ஒரு நாவல் என்னும் தொடர் கதையை வாசிப்பீர்களானால் அது உங்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கும். ஆனால், கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை வாசித்தால்தான் உங்கள் வாழ்க்கை மாறுதல் அடையும். ஆவிக்குரிய வாழ்க்கையையும், நித்தியஜீவனையும் நீங்கள் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்தும் இந்த வேதாகமத்தில் உண்டு.

இந்த மாம்ச உலகில் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வது என்பது சுலபமான காரியமல்ல. பரலோகத்தில் நித்திய வாழ்வு எப்படி இருக்கும் என்பதை உல கில் வாழ்ந்து காட்டவேண்டும்.

இந்த உலகில் நீங்கள் பாவத்துக்கு மரித்தவர்கள் என்றும், உங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்றும் இந்த உலகத் தின் ஒரே இரட்சகர் இயேசுகிறிஸ்துவே என்றும் நீங்கள் அறியவேண்டும். தேவன் உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் அறியவேண்டும். தேவன் உங்க ளுக்காக மரிக்கத் தமது குமாரனை அனுப்பித்தந்தார் என்பதையும் நீங்கள் அறியவேண்டும். இதை வேதாகமம் தான் உங்களுக்கு அறிவிக்கிறது. நீங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என் றும், உலகஇரட்சகர் என்றும், உங்கள் இரட்சகர் என்றும் அறியவேண்டும். விசு வாசிக்கவேண்டும். அப்படி இயேசுவை விசுவாசித்தால் நீங்கள் இரட்சிக்கப்படு வீர்கள் என்று அறியவேண்டும். இதை யும் உங்கள் வேதாகமம்தான் உங்களுக் குச் சொல்லித்தருகிறது.

வேதாகமம் ஒரு தனிச்சிறப்புப் பெற்ற ஒரு புத்தகமா? இது எல்லாப் புத்தகங் களையும் விடவும் சிறந்ததா? இது மற்ற எல்லாப் புத்தகங்களையும்விட வித்தியா சமானதா? ஆம்! அப்படியேதான்!

வேதாகமம் தேவனுடைய புத்தகம்

பரிசுத்த வேதாகமம் தேவனுடைய உள்ளத்தை மனிதனுக்கு வெளிப்படுத்தும் புத்தகமாகும்.

பரிசுத்தவேதாகமம் மட்டுமே தேவனு டைய ஆவியினால் அருளப்பட்டது. அது நேரடியாக தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்டது.

வேதாகமம்மட்டுமே தவறு இல்லாத புத்தகமாகும். முற்றிலும் தவறோ, பிழையோ இல்லாதது. வேதாகமத்தில் எந்தவொரு தவறும், பிழையும் இருக்க முடியாது. இதில் எந்தத் தவறும் இடம்பெற முடியாது.

வேதாகமம் மட்டுமே நித்தியமான புத்தகம்! ஏனெனில் வேதாகமத்தை எழுதின தேவன் மட்டுமே நித்தியமானவர்.

வேதாகமம் மட்டுமே பூரணமான புத்தகம்! பரலோகத்துக்குச் செல்லும் வழி என்னவென்பதை நமக்குக் காட்டுவது இந்த வேதாகமம் மட்டுமே!

எனவே வேதாகமத்தை வாசித்துப் பயன்பெறுங்கள். நீங்கள் வேதாகமத்தைப் போல வேறொரு புத்தகத்தைக் காணவே முடியாது.